திருச்சி  மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் :

by Editor / 16-08-2021 05:03:04pm
திருச்சி  மலைக்கோட்டை அருள்மிகு தாயுமானசுவாமி திருக்கோயில் :

 

திருச்சி நகரின் மையப்பகுதியில் மலைக்கோட்டை என்று சொல்லும் ஒரு குன்றின் மேல் இக்கோயில் அமைந்திருக்கிறது. பழமையான சிவாலயமான இத்திருத்தலம், 274 சைவத்தலங்களுள் ஈடு இணையற்ற தலம். தென் கயிலாயம் என்றும், தட்சிண கயிலாயம் என்றும் அழைக்கப்படுகிறது.


இறப்பவருக்கு முக்திதரும் காசியை விடவும், பிறப்பவருக்கு முக்திநல்கும் திருவாரூரை விடவும் பெருமை மிகுந்த சிராமலைபோல அருமை வாய்ந்த திருத்தலம் அவனியில் வேறு எங்கும் இல்லை என்னும் சிறப்பினைக் கொண்டது இத்திருத்தலம்.
பெண்களுக்கு சுகப் பிரசவம் அருளும் சிறப்புவாய்ந்த கோயிலாகத் திகழ்கிறது இக்கோயில். சுவாமியே பெண்ணாக வந்து தனது பக்தைக்குப் பிரசவம் பார்த்த வரலாற்றுச் சிறப்பு மிக்கது இந்தத் திருத்தலம்.
இத்தலத்தில் நவக்கிரகங்கள் அனைத்தும் சூரிய பகவானைப் பார்த்தவாறு எழுந்தருளியுள்ளதால், இங்கு வந்து வழிபட்டால் நவக்கிரகத் தோஷங்கள் நீங்கும்.


மூலவர் கருவறை தெற்குச் சுற்றில் தென்முகக் கடவுளான தட்சிணாமூர்த்தி எட்டு முனிவர்களுடன் தர்ப்பாசனத்தில் அமர்ந்து அருள் பாவிப்பது, மற்ற தலங்களில் இல்லாத சிறப்பாகும். இவரை வழிபட்டால் கல்வியும், ஞானமும் கிட்டும்.
மலைப்பாறையாகத் தோற்றமளிக்கும் இத்தலத்தில் மலையை குடைந்து கீழ் நிலையில் குடைவரைக்கோயிலும், மேல்நிலையில் ஒரு குடைவரைக்கோயிலும் பழம்பெருமையுடன் அமைக்கப்பெற்றுள்ளன. அவைகளில் காணப்பெறும் கல்லெழுத்துக்கள், தமிழக வரலாற்றிற்கு உதவுகின்றன.


திருச்சி தாயுமானவர் கோயிலில் ஆண்டுதோறும், சித்திரை மாதம் நடக்கும் வசந்தப் பெருவிழாவில் ஐந்தாம் நாள் 'செட்டிப்பெண் மருத்துவம்" என்ற நிகழ்ச்சி நடக்கிறது.


சித்திரையில் பிரம்மோற்சவம், பங்குனியில் தெப்ப உற்சவம், ஆடிப்பூரம், ஐப்பசியில் அன்னாபிஷேகம், திருக்கார்த்திகை, மகரசங்கராந்தியன்று பஞ்சமூர்த்தி புறப்பாடு வைபவம், சிவராத்திரி போன்றவை கொண்டாடப்படுகிறது.
திக்கற்றவர்களுக்கு இத்தலத்து ஈசன், தாயாக இருந்து அரவணைத்துக் காக்கிறார். தாயை இழந்தவர்கள் இவரிடம் வேண்டிக்கொண்டால், அவர்களுக்கு தாயாக இருந்து வழி நடத்துவார் என்பது நம்பிக்கை. சுகப் பிரசவம் ஆவதற்கு இங்கு அதிகளவில் வேண்டிக்கொள்கிறார்கள்.


இத்தலத்தில் அமைந்துள்ள சிவன் மற்றும் அம்பாளுக்கு பால் அபிஷேகம் செய்வித்தும், வஸ்திரம் அணிவித்தும், வாழைத்தார் படைத்தும் நேர்த்திக்கடன் நிறைவேற்றுகின்றனர்.

 

Tags :

Share via