இந்தியாவில் 3–ம் தவணையாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

by Editor / 23-08-2021 05:05:22pm
இந்தியாவில் 3–ம் தவணையாக ‘பூஸ்டர்’ தடுப்பூசி தேவையில்லை: எய்ம்ஸ் இயக்குனர் தகவல்

இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி, அதாவது மூன்றாம் தவணை கொரோனா தடுப்பூசி, செலுத்துவது இப்போதைக்குத் தேவையில்லை என்று அகில இந்திய மருத்துவ அறிவியல் கல்வி நிறுவன (எய்ம்ஸ்) இயக்குநர் மருத்துவர் ரண்தீப் குலேரியா கூறினார்.

கொரோனா பாதிப்பிலிருந்து மக்களைக் காப்பதற்காக இந்தியா உள்பட உலகம் முழுவதும் இப்போது தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு வருகின்றன. இவற்றில் அமெரிக்காவைச் சேர்ந்த ஜான்சன் அண்ட் ஜான்சன் நிறுவனத்தின் கொரோனா தடுப்பூசியைத் தவிர மற்ற அனைத்து தடுப்பூசிகளும் இரண்டு தவணைகளாக செலுத்தக் கூடியவை. இவ்வாறு இரண்டு தவணைகளாக தடுப்பூசி செலுத்துவதன் மூலம், உடலில் நோய் எதிர்ப்புத் திறன் அதிகரித்து, கொரோனா பாதிப்பால் ஏற்படும் உயிரிழப்புகளை தடுப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், அமெரிக்கா, பிரிட்டன் போன்ற மேலும் சில நாடுகளில் வேகமாக பரவக் கூடிய டெல்டா வகை கொரோனா பாதிப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ள நிலையில், மக்களின் உடலில் கொரோனா தீநுண்மிக்கு எதிரான நோய் எதிர்ப்புத் திறனை மேலும் அதிகரிக்கச் செய்யும் வகையில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி அதாவது கூடுதலாக மூன்றாவது தவணை தடுப்பூசி செலுத்துவதற்கு அமெரிக்கா, பிரிட்டன், இஸ்ரேல் போன்ற நாடுகள் திட்டமிட்டு வருகின்றன.

வரும் செப்டம்பர் 20-ம் தேதி முதல் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும். இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி 8 மாதங்களை நிறைவு செய்த அனைத்து அமெரிக்கர்களும் இந்த ‘பூஸ்டர் டோஸ்’ தடுப்பூசியை செலுத்திக் கொள்ளலாம்’ என்ற அறிவிப்பை அமெரிக்கா வெளியிட்டுள்ளது.

அதுபோல, இந்தியாவிலும் ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவதற்கான அழைப்பு விடுக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதுகுறித்து எய்ம்ஸ் இயக்குநர் ரண்தீப் குலேரியா கூறியதாவது:

இந்தியாவில் ‘பூஸ்டர்’ தடுப்பூசி அதாவது 3ம் தவணை தடுப்பூசி செலுத்தப்பட வேண்டுமா என்பதற்கான போதுமான தரவுகள் இப்போதைக்கு இல்லை. அதிலும், முதியவர்கள் மற்றும் உயர் பாதிப்புக்கு உள்ளாகக் கூடிய பிரிவினருக்கு செலுத்தப்பட வேண்டுமா என்பதற்கான தரவுகளும் இல்லை. போதுமான தரவுகள், ஆராய்ச்சி முடிவுகள் இருந்தால்தான் தடுப்பூசியின் பாதுகாப்பு அளவு குறித்த பதிவுகள் நமக்கு கிடைக்கும். இதுதொடர்பாக கூடுதல் ஆராய்ச்சி தேவைப்படுகிறது. அதற்கு சில மாதங்கள் ஆகலாம்.

உத்தேசமாக, அடுத்த ஆண்டு தொடக்கத்தில் இதுதொடர்பாக தரவுகள் நமக்கு கிடைக்க வாய்ப்புள்ளது. அதன் மூலம்தான், எந்த மாதிரியான ‘பூஸ்டர்’ தடுப்பூசி, யாருக்குத் தேவைப்படும் என்பது குறித்து முடிவு செய்ய முடியும். அதுமட்டுமின்றி, செலுத்தப்பட்ட தடுப்பூசியின் செயல்திறன் குறைந்துள்ளதற்கான தரவுகள் கிடைத்த பிறகுதான், இந்தியாவில் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான அழைப்பு விடுக்க முடியும்.

இன்றைய நிலையில் இரண்டு தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு தீவிர நோய் பாதிப்பிலிருந்து சிறந்த பாதுகாப்பு மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியிருப்பதை உலகம் முழுவதும் காண முடிகிறது. மருத்துவனையில் சேர்க்கப்படுபவர்களின் எண்ணிக்கையும் பெரிய அளவில் உயரவில்லை.

இருந்தபோதும், குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு இந்தியாவிலும் மூன்றாம் தவணை தடுப்பூசி செலுத்துவதற்கான அவசியம் எழலாம் என்று அவர் கூறினார்.

 

Tags :

Share via