அக்.2 காந்தி ஜெயந்தி நாளில்  கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி

by Editor / 20-09-2021 05:43:09pm
 அக்.2 காந்தி ஜெயந்தி நாளில்  கிராம சபை கூட்டம் நடத்த அனுமதி

 

தமிழகத்தில் அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த அனுமதி அளித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.


கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் சில கட்டுப்பாடுகள் அமலில் இருந்து வருகின்றன. இந்த நிலையில் திமுக ஆட்சியில் முதல் முறையாக வருகிற அக்டோபர் 2-ந் தேதி காந்தி ஜெயந்தி நாளில் கிராம சபை கூட்டங்கள் நடத்த தமிழக அரசு அனுமதியளித்து உத்தரவு பிறப்பித்துள்ளது.கிராம சபை கூட்டம் நடைபெறும் இடங்களில் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை அனைவரும் பின்பற்ற வேண்டும் என்றும் அரசாணையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் தமிழகத்தில் 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதால் இந்த 9 மாவட்டங்களைத் தவிர்த்து மற்ற மாவட்டங்களில் கிராம சபை கூட்டங்களை நடத்தலாம் என்றும் தமிழக அரசின் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதனிடையே கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியம் ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் ஒரு வழக்கு தொடர்ந்துள்ளார். அதில், கிராமசபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் மாவட்ட ஆட்சியர் விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டதாக குறிப்பிட்டிருந்தார்.

கிராம சபை கூட்டம் நடத்துவதற்கு ஊராட்சித் தலைவருக்குதான் அதிகாரம் உள்ளதாகவும் எனவே கிராம சபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும் அவர் தமது மனுவில் கேட்டுக் கொண்டிருந்தார். இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி ஆனந்தவெங்கடேஷ் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், கொரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடிய ஒன்பது மாவட்டங்களை தவிர தமிழகம் முழுவதும் அக்டோபர் 2 கிராமசபை நடத்தப்படும் எனத் தெரிவித்தார். அதற்கான அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

அப்போது மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, கிராமசபைக் கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்கே உள்ளது; தற்போது ஊராட்சிகளின் ஆய்வாளராக உள்ள மாவட்ட ஆட்சித்தலைவர் விருப்பத்தின்படியே கிராமசபை நடப்பது போன்ற சூழலை உருவாக்கி இருப்பது சட்டத்திற்குப் புறம்பானது என்றும் வாதிட்டார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், இதுகுறித்து தமிழக அரசு பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கை அக்டோபர் 6-ந் தேதி ஒத்திவைத்தார்.


 

 

Tags :

Share via