பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை  எடுக்கவேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்

by Editor / 04-10-2021 04:04:53pm
 பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை  எடுக்கவேண்டும்: ஓ.பி.எஸ். வேண்டுகோள்



‘மத்திய அரசுக்கு உரிய அழுத்தம் கொடுத்து பருத்தி பஞ்சு விலையை குறைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும்’ என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.


இதுதொடர்பாக அண்ணா தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
உழவுத்‌தொழிலுக்கு அடுத்தபடி யாக தமிழ்நாட்டில்‌ அதிக வேலைவாய்ப்பினைத்‌ தரும்‌ தொழிலாகவும்‌, தமிழ்நாட்டின்‌ பொருளாதாரத்தை உயர்த்துகின்ற முக்கியத்‌ தொழிலாகவும்‌, அன்னியச்‌ செலாவணியை ஈட்டுகின்ற தொழிலாகவும்‌ ஜவுளித்‌தொழில்‌ விளங்குகின்றது என்று சொன்னால்‌ அது மிகையாகாது. தமிழ்நாட்டில்‌, கோவை, திருப்பூர்‌ மாவட்டங்களில்‌ ஆயிரக்கணக்கான ஆயத்த ஆடை தொழிற்சாலைகள்‌, விசைத்தறித்‌ தொழில்‌ மற்றும்‌ ஜவுளித்‌தொழில்களை மேற்கொள்ளும்‌ நிறுவனங்கள்‌ இயங்கி வருகின்றன.


10 ஆண்டுகளுக்குப்‌ பிறகு சர்வதேச பருத்தி பஞ்சு விலை தற்போது உச்சபட்ச உயர்வு விலையினை எட்டியுள்ளதாகவும்‌, சர்வதேச சந்தையிலிருந்து இறக்குமதி செய்யும்‌ பஞ்சு விலை ஒரு கேண்டி, அதாவது 356 கிலோ, 59 ஆயிரம்‌ ரூபாய்‌ என்று இருந்தது தற்போது ஒரு கேண்டி 67 ஆயிரம்‌ ரூபாயாக உயர்ந்துவிட்டதாகவும்‌, இதன்‌ விளைவாக உள்‌நாட்டிலும்‌ பஞ்சு விலை ஒரு கேண்டி 55 ஆயிரம்‌ ரூபாயிலிருந்து 60 ஆயிரம்‌ ரூபாயாக உயர்ந்துள்ளதாகவும்‌,


தமிழ்நாட்டில்‌ உள்ள நூற்பாலைகள்‌ வசம்‌ இருந்த பஞ்சு கையிருப்பு முற்றிலும்‌ தீர்ந்துவிட்டதாகவும்‌, தற்போது அதிக விலை கொடுத்து பஞ்சு வாங்க வேண்டியுள்ள சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும்‌, இதன்‌ காரணமாக நூற்பாலைகளின்‌ உற்பத்தி செலவினம்‌ அதிகரித்துள்ளதாகவும்‌, ஜவுளித்‌ தொழிலில்‌ ஈடுபட்டுள்ளோர்‌ கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளதாகவும்‌ பத்திரிகையில்‌ செய்திகள்‌ வந்துள்ளன. இந்தத்‌ தொழிலில்‌ தமிழ்நாட்டின்‌ பங்கு அதிகம்‌ இருக்கிறது என்பதையும்‌ கருத்தில்‌ கொண்டு மாநில அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்‌ என்பதே அனைவரின்‌ எதிர்பார்ப்பாக இருக்கிறது.


எனவே, முதலமைச்சர்‌ இதில்‌ உடனடியாக தலையிட்டு, மத்திய அரசிற்கு கொடுக்க வேண்டிய அழுத்தத்தைக்‌ கொடுத்து, பஞ்சு விலையை குறைக்கவும்‌, ஆடைகளின்‌ விலை உயராமல்‌ பார்த்துக்‌ கொள்ளவும்‌, இந்தத்‌ தொழில்‌ தொடர்ந்து வளர்ச்சி யடையவும்‌ நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கேட்டுக்‌ கொள்கிறேன்‌.
இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 

Tags :

Share via