தனது காருக்கு, அபராதம் விதித்த போலீஸாரை பாராட்டிய தெலங்கானா அமைச்சர்

by Editor / 05-10-2021 09:55:57am
 தனது காருக்கு, அபராதம் விதித்த போலீஸாரை பாராட்டிய தெலங்கானா அமைச்சர்

தவறான பாதையில் வந்த தனது காருக்கு, அபராதம் விதித்த போக்குவரத்து காவல் எஸ்.ஐ மற்றும் கான்ஸ்டபிள் ஆகியோரையும் நேற்று நேரில் அழைத்து பாராட்டினார் தெலங்கானா ஐடி துறை அமைச்சர் கே.டி.ராமாராவ்.

கடந்த 2-ம் தேதி காந்தி ஜெயந்தியன்று, தெலங்கானா மாநில முதல்வர் கே.சந்திரசேகர ராவின் மகனும், ஐடி துறையின் அமைச்சருமான கே.டி.ராமராவ், ஹைதராபாத்தில் உள்ள காந்தி ஜெயந்தி விழாவில் கலந்து கொண்டார். அவரை விழா நடக்கும் இடத்தில் காரில் இருந்து இறக்கி விட்ட ஓட்டுநர், பின்னர், காரை 'பார்க்' செய்ய எதிர்பாதையில் சென்றுள்ளார். அங்கு போக்குவரத்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த எஸ்.ஐ. ஐலய்யா மற்றும் கான்ஸ்டபிள் வெங்கடேஸ்வருலு ஆகியோர், அமைச்சரின் காரை மறித்து அபராதம் விதித்தனர். இதற்கான ரசீது அமைச்சரின் மொபைல் எண்ணுக்கு சென்றது. உடனே அமைச்சர் கே.டி.ராமாராவ் அபராத தொகையை மொபைல் மூலமாக செலுத்தி விட்டு, தனது கார் ஓட்டுநரை அழைத்து விசாரித்துள்ளார். அவர் நடந்த விஷயங்களை கூறினார்.

அமைச்சரின் கார் என்று தெரிந்தும் பாரபட்சம் பாராமல் அபராதம் விதித்த எஸ்.ஐ, மற்றும் கான்ஸ்டபிள் ஆகிய இருவருரையும் தனது அலுவலகத்துக்கு நேற்று அழைத்து பொன்னாடை போர்த்தி அமைச்சர் ராமராவ் பாராட்டினார். மக்களுக்கும், மக்கள் பிரதிநிதிகளுக்கும் சட்டம் ஒன்றே என்பதை பயப்படாமல் எடுத்துக் கூறிய இருவரையும் பாராட்டுவதாக தெரிவித்தார். இதுபோல் கட்சியினரும் சட்டத்தை மீறி நடக்க கூடாது என்று அமைச்சர் தனது கட்சியினருக்கு அறிவுறுத்தினார்.

 

Tags :

Share via