சென்னை தலைமை செயலகத்தில்   ஸ்டாலின் ‘திடீர்’ ஆய்வு

by Editor / 05-10-2021 03:52:41pm
சென்னை தலைமை செயலகத்தில்   ஸ்டாலின் ‘திடீர்’ ஆய்வு

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் உள்ள முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு நேரில் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.


அப்போது, முதலமைச்சரின் தனிப் பிரிவிற்கு மனு அளிக்க வந்திருந்த பொதுமக்களிடம் அவர்களது கோரிக்கைகளை முதலமைச்சர் கேட்டறிந்தார்.மனுதாரர்களில் ஒருவர் காணாமல் போன தனது மகனை கண்டுபிடித்து தருமாறு கோரிக்கை வைத்தார். இம்மனு மீது உடனடியாக நடவடிக்கை எடுத்து, காணாமல் போன அப்பெற்றோரின் மகனை கண்டுபிடித்திட துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் உத்தரவிட்டார்.


மேலும், பொதுமக்கள் அளிக்கும் மனுக்கள் மீது எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்த விவரங்களை கேட்டறிந்த முதலமைச்சர், அனைத்து மனுக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுத்து, தீர்வு காணப்படுவதை கண்காணித்து உறுதி செய்திடவேண்டும் என்றும், மனுதாரர்களுக்கு, மனுக்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து உரிய பதில்களை உடனுக்குடன் அளித்திட வேண்டும் என்றும் அலுவலர்களை அறிவுறுத்தினார். இந்நிகழ்வின்போது, தலைமைச் செயலாளர் வெ. இறையன்பு, முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அலுவலர் ஷில்பா பிரபாகர் சதீஷ் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.


முதலமைச்சர் ஸ்டாலின் ஆங்காங்கே அலுவலகங்களுக்கு சென்று திடீர் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறார். வெளியூர் செல்லும் போது அவர் இதுபோன்று திடீர் ஆய்வுகளை நடத்தி வருகிறார். சமீபத்தில் சேலம், தர்மபுரி மாவட்டங்களில் சுற்றுப்பயணம் செய்த போது போலீஸ் நிலையம் மற்றும் ஆதிதிராவிடர் மாணவர்கள் நல விடுதிக்கு சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். போலீஸ் நிலையத்தில் அங்குள்ள சேரில் உட்கார்ந்து கொண்டு ரிக்கார்டுகளை எல்லாம் கொண்டு வரச்சொல்லி அதுதொடர்பாக போலீஸ் அதிகாரிகளிடம் பல்வேறு விளக்கங்களை கேட்டார்.இதேபோன்று மாணவர் விடுதியில் உணவு நன்றாக தருகிறார்களா, தரமாக இருக்கிறதா, வேறு என்ன குறை இருக்கிறது என்று முதலமைச்சர் கேட்டார்.


தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினிடம், பொதுமக்கள் தங்கள் புகார்களை நேரடியாக அளிக்கும் வகையில், தமிழக முதல்வரின் தனிப்பிரிவு தொடங்கப்பட்டது. இதற்காக இணையதளம் தொடங்கப்பட்டு, இணையம் வாயிலாகவும் புகார் அளிக்க வழிவகை செய்யப்பட்டது.


பொதுமக்களிடமிருந்து நேரடியாக புகார்களை பெறும் வகையில், ‘உங்கள் தொகுதியில் முதல்வர்’ என்ற தனிப்பிரிவு உருவாக்கப்படும் என்று தி.மு.க. தேர்தல் பிரச்சாரத்தின் போது அளித்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், இந்த சேவை உருவாக்கப்பட்டது.


தமிழ் மற்றும் ஆங்கிலம் ஆகிய இரண்டு மொழிகளிலும் இந்த இணையதளம் செயல்படுகிறது. பொதுமக்கள் இந்த இணையதளம் மூலம் தங்கள் புகார்களை அளிக்கலாம். புகார்கள் குறித்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்தும் அந்த இணையதளத்தில் தெரிந்து கொள்ளவும் வசதிகள் செய்யப்பட்டுள்ளது.


முதலமைச்சரின் தனிப்பிரிவில் பொது மக்களிடமிருந்து நேரடியாக மனுக்களைப் பெறுவதோடு மட்டுமின்றி, அஞ்சல், இணையதளம், மின்னஞ்சல் மற்றும் முதலமைச்சர் உதவி மையம் ஆகிய வழிமுறைகளிலும் மனுக்கள் பெறப்பட்டு வருகிறது. அவ்வாறு இணையம் வழியாக பெறப்படும் மனுக்களுக்கான ஒப்புகை சீட்டு சம்பந்தப்பட்டவரின் அலைபேசிக்கு குறுந்தகவல் அனுப்பப்படுகிறது.


கோரிக்கை அல்லது மனு எண் மூலமாகவே தங்கள் கோரிக்கை நிலை குறித்து, இணையம் வழியாகத் தெரிந்து கொள்ளலாம். பொதுமக்களிடம் நேரடியாகவோ, தபால் மூலமாகவோ அல்லது இணையம் வழியாகவோ, எவ்வழியில் பெறப்பட்டாலும், முதல்வரின் தனிப்பிரிவில் அனைத்து மனுக்களுக்கும் ஒரே மாதிரியான நடைமுறையே பின்பற்றிதான் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசு அறிவித்திருந்தது.

 

Tags :

Share via