9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: 60 சதவீதவாக்குப்பதிவு

by Editor / 06-10-2021 08:01:59pm
 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தல்: 60 சதவீதவாக்குப்பதிவு


தமிழ்நாட்டில் காஞ்சீபுரம், செங்கல்பட்டு, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களுக்கு 2 கட்ட தேர்தல் அறிவிக்கப்பட்டது.
அதன்படி முதற்கட்ட ஊரக உள்ளாட்சித் தேர்தலுக்கான  வாக்குப்பதிவு  நடைபெற்றது. 


4 வாக்குகள் 2 கட்டத்  தேர்தலில் 2,981 இடங்களில் போட்டியின்றி வேட்பாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால், மீதமுள்ள 23,998 இடங்களுக்கு  தேர்தல் நடைபெற்றது.


9 மாவட்டங்களில் 39 ஒன்றியங்களில்   வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்றது. மாலை 6 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது. பொதுமக்கள் நீண்ட வரிசையில் நின்று வாக்களித்தனர். 


ஊராட்சி உறுப்பினர், ஊராட்சி மன்றத்தலைவர், ஒன்றிய கவுன்சிலர், மாவட்ட ஊராட்சி கவுன்சிலர் ஆகிய 4 பதவிகளுக்கு வாக்குச்சீட்டு முறையில் தேர்தல் நடத்தப்பட்டது. எனவே  ஒவ்வொரு வாக்காளரும் தலா 4 வாக்குகள் வீதம் பதிவு செய்தனர்.4 வாக்குகள் அளிப்பதற்கு வசதியாக இளம்சிவப்பு, வெள்ளை, பச்சை, மஞ்சள் என 4 கலரில் வாக்குச்சீட்டு அச்சடிக்கப்பட்டு வாக்காளர்களுக்கு வழங்கப்பட்டது. வாக்காளர்கள் 4 வாக்குச்சீட்டிலும் தனித்தனியாக சின்னங்களில் சீல் வைத்து, வாக்குப்பெட்டியில் போட ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 


வாக்களிக்க வருபவர்களுக்கு வசதியாக, வாக்குச்சாவடி மையம் அமைந்துள்ள 100 மீட்டருக்கு முன்னதாக, கட்சிகள் சார்பில் பூத்சிலிப் வழங்கப்பட்டது. பொதுமக்கள் பூத்சிலிப் பெற்று தாங்கள் எந்த மையங்களில் வாக்களிக்க வேண்டும் என்று எளிதாக சென்று வாக்களித்தனர். 


 வாக்குப்பதிவை இணையதளம் மூலம் மாநில தேர்தல் ஆணையமும், மாவட்ட ஆட்சியரும்  கண்காணிக்க ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. 


கொரோனா பாதிப்பு இருந்தவர்கள் மட்டும் மாலை 5 மணிக்கு மேல் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன. 


மொத்தத்தில் காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 6 மணிக்கு முடிவடைந்த  தேர்தல் மிகவும் அமைதியான முறையில் நடைபெற்றதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்தது.


மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தபோதிலும், வாக்குப்பதிவு விவரம் இரவில் தான் அறிவிக்கப்பட்டது.அதன்படி 9 மாவட்டங்களிலும் சராசரியாக 60 சதவீத வாக்குகள் பதிவானதாக அறிவிக்கப்பட்டது.9 மாவட்டங்களில் மொத்த மாவட்ட ஊராட்சிகளின் எண்ணிக்கை 9 ஆகும். மொத்த ஊராட்சி வார்டுகளின் எண்ணிக்கை 140. இதில் முதல்கட்டமாக  78 ஊராட்சி வார்டுகளுக்கு தேர்தல் நடைபெற்றது. 


இரண்டாம் கட்டமாக 62 ஊராட்சி வார்டுகளுக்கு வருகிற 9ம் தேதி தேர்தல் நடைபெறும். 
மொத்த ஊராட்சி ஒன்றியங்களின் எண்ணிக்கை 74. முதல்கட்டமாக 39 இடங்களிலும், 2ம் கட்டமாக 35 இடங்களிலும் தேர்தல் நடக்கிறது. மொத்த ஊராட்சி ஒன்றிய வார்டுகளின் எண்ணிக்கை 1381. அதில் முதல் கட்டம் 755. 2ம் கட்டமாக 626 இடங்களுக்கு தேர்தல் நடைபெறுகிறது. 


மொத்த ஊராட்சிகளின் எண்ணிக்கை 2901. இதில் முதல்கட்டமாக  1577 ஊராட்சிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.  2ம் கட்டமாக 1,324 இடங்களுக்கு தேர்தல் நடக்கிறது. மொத்த ஊராட்சிகளின் வார்டுகளின் எண்ணிக்கை 22,581. இதில் முதல்கட்டமாக நேற்று தேர்தலை சந்தித்தது 12,252. 2ம் கட்டமாக 10,329 இடங்களுக்கு தேர்தல் நடைபெறும்.


போட்டியிடும் வேட்பாளர்கள் எண்ணிக்கை 79,433. இதில் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள் 2,981 பேர்.  மொத்த வாக்காளர்கள் எண்ணிக்கை 75 லட்சத்து 60 ஆயிரம் ஆகும். 


இதில் முதல் கட்டமாக 41 லட்சத்து 94 ஆயிரம் வாக்களிக்க தகுதி பெற்றிருந்தனர். 
வாக்காளர் அடையாள அட்டை இல்லாதவர்கள் ஆதார் கார்டு, பான்கார்டு உள்ளிட்ட 11 ஆவணங்களை வைத்து வாக்களிக்க அனுமதிக்கப்பட்டது.2&வதுகட்ட வாக்குப்பதிவு வருகிற 9&ந் தேதி நடக்கிறது.
வாக்கு எண்ணிக்கை வருகிற 12&ந் தேதி நடைபெறுகிறது. 
 

 

Tags :

Share via