காவல் ஆணையரகங்கள் எல்லைகள் பிரிப்பு: சென்னைக்கு 104 காவல் நிலையங்கள்

by Editor / 10-10-2021 09:23:45pm
காவல் ஆணையரகங்கள் எல்லைகள் பிரிப்பு: சென்னைக்கு 104 காவல் நிலையங்கள்

சென்னை, ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரங்களின் எல்லைகள் இறுதி செய்யப்பட்டு, அவற்றுக்கு காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டன.

இதன்படி ஆவடி மாநகர காவல்துறைக்கு 25 காவல் நிலையங்கள், தாம்பரத்துக்கு 20 நிலையங்கள் வழங்கப்பட்டுள்ளன. 137 காவல் நிலையங்களோடு செயல்பட்ட சென்னை பெருநகர காவல்துறை எல்லைகள் பிரிப்புக்கு பின்னர் 33 காவல் நிலையங்கள் குறைந்து 104 காவல் நிலையங்களோடு செயல்பட உள்ளது. சென்னை நகரின் மையப் பகுதியை காட்டிலும், புறநகர் பகுதிகள் வேகமாக விரிவடைந்து செல்வதாலும், மக்கள் குடியேற்றம் அதிகரித்து வருவதினாலும் காவல்துறையின் கண்காணிப்பையும், நடவடிக்கையையும் அப்பகுதிகளில் தீவிரப்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது.

அதேவேளையில் 137 காவல் நிலையங்களோடு செயல்பட்ட சென்னை பெருநகர காவல்துறை, புறநகர் பகுதியை தனிக்கவனம் செலுத்த முடியாத நிலையில் இருந்தது. இதன் விளைவாக நகருக்குள் நடைபெறும் சட்டவிரோதச் செயல்களை காட்டிலும், புறநகர் பகுதிகளில் சட்டவிரோத செயல்கள் அதிகரித்த வண்ணம் இருந்தன. இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், கடந்த செப்டம்பர் 13-ஆம் தேதி சட்டப்பேரவையில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், சென்னை பெருநகர காவல்துறையை பிரித்து தாம்பரம்,ஆவடி என புதிதாக இரு காவல் ஆணையரகங்கள் அமைக்கப்படும் என அறிவித்தார்.

இதில் காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு காவல் மாவட்டங்களைச் சேர்ந்த சில பகுதிகளும் சேர்க்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து இரு காவல் ஆணையரகங்களுக்கும் எல்லைப் பகுதிகளை பிரிப்பது,காவல் நிலையங்களை பிரிப்பது,புதிதாக நிர்வாக கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக புதிய காவல் ஆணையரகங்களை விரைந்து கட்டமைக்கும் வகையில் தாம்பரம் காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி எம்.ரவியும்,ஆவடி காவல் ஆணையரகத்தின் சிறப்பு அதிகாரியாக ஏடிஜிபி சந்தீப் ராய் ரத்தோரும் நியமிக்கப்பட்டனர்.

இதைத் தொடர்ந்து 3 காவல் ஆணையரங்களின் எல்லைகளை பிரிப்பது, காவல் நிலையங்களை வரையறுப்பது, காவலர்கள், அதிகாரிகளை நியமிப்பது,உள் கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவது உள்ளிட்ட ஆகியவை குறித்து தமிழக காவல்துறையின் சட்டம் மற்றும் ஒழுங்கு டிஜிபி சி.சைலேந்திரபாபு, சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவால், ஆவடி மாநகர காவல்துறை சிறப்பு அதிகாரி சந்தீப் ராய் ரத்தோர், தாம்பரம் மாநகர காவல்துறை சிறப்பு அதிகாரி எம்.ரவி ஆகியோர் தொடர்ந்து ஆலோசித்து வந்தனர். இதில் தற்போது 3 காவல் ஆணையரங்களுக்கான காவல் நிலையங்கள் பிரிக்கப்பட்டுள்ளன.

இதன்படி 137 காவல் நிலையங்களோடு செயல்பட்ட பெருநகர காவல்துறை 33 காவல் நிலையங்கள் குறைந்து, 104 காவல் நிலையங்களோடு செயல்பட உள்ளது. இதில் 20 காவல் நிலையங்களை ஆவடி காவல் ஆணையரகத்துக்கும்,13 காவல் நிலையங்களை ஆவடி காவல் ஆணையரகத்துக்கும் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்து பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

ஆவடி, தாம்பரம் காவல் ஆணையரகம்: ஆவடி காவல் ஆணையரகம் செயல்படுவதற்கு சென்னை பெருநகர காவல்துறையின் மேற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. இந்த ஆணையரகத்தின் கீழ் மொத்தம் 25 காவல் நிலையங்கள் வருகின்றன. இதில் 20 காவல் நிலையங்கள் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்தும், 5 காவல் நிலையங்கள் திருவள்ளூர் மாவட்ட காவல்துறையில் இருந்தும் ஆவடி காவல் ஆணையரகத்துக்கு பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

இதேபோல தாம்பரம் காவல் ஆணையரகம் செயல்படுவதற்கு பரங்கிமலையில் உள்ள சென்னை பெருநகர காவல்துறையின் தெற்கு மண்டல இணை ஆணையர் அலுவலகம் வழங்கப்பட்டுள்ளது. தாம்பரம் காவல் ஆணையரகத்தின் கீழ் மொத்தம் 20 காவல் நிலையங்கள் வருகின்றன. இதில் 13 காவல் நிலையங்கள் சென்னை பெருநகர காவல்துறையில் இருந்தும், 2 காவல் நிலையங்கள் காஞ்சிபுரம் மாவட்ட காவல்துறையில் இருந்தும், 5 காவல் நிலையங்கள் செங்கல்பட்டு மாவட்ட காவல்துறையில் இருந்தும் பிரித்து வழங்கப்பட்டுள்ளன.

பாதுகாப்பு முக்கியத்துவம்: சென்னையில் புறநகர் பகுதிகளில் இருக்கும் விமான நிலையம்,புழல் மத்திய சிறை வளாகம் ஆகியவை சென்னை பெருநகர காவல்துறை ஆணையரகத்தின் எல்லையிலேயே நீடிக்கின்றன. பாதுகாப்பு முக்கியத்துவம் கருதி இப் பகுதிகள் பெருநகர காவல்துறையில் இருந்து பிரிக்கப்படவில்லை என காவல்துறை உயர் அதிகாரிகள் தெரிவித்தனர்.

அக்டோபருக்குள் இயங்கும்: இதன் அடுத்தக் கட்டமாக ஒவ்வொரு காவல் நிலையங்களுக்கும் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகள், புதிய காவல் ஆணையரங்களுக்கு தேவையான ஆயுதப்படை காவலர்கள், மத்தியக் குற்றப்பிரிவு, நுண்ணறிவுப் பிரிவு உள்ளிட்ட சிறப்பு பிரிவுகளுக்கு தேவையான காவலர்கள், அதிகாரிகள் ஆகியவை குறித்தும், புதிய காவல் ஆணையரங்களுக்கு தேவையான கணினி உள்ளிட்ட இயந்திரங்கள்,பர்னிச்சர்,வாகனங்கள்,தகவல் தொழில்நுட்ப சாதனங்கள் ஆகியவை குறித்தும் இரு காவல் ஆணையரங்களின் சிறப்பு அதிகாரிகள் விரைவில் திட்ட அறிக்கை அளிக்க உள்ளனர். இந்த திட்ட அறிக்கையை சென்னை பெருநகர காவல்துறை ஆணையர் சங்கர் ஜிவாலுடன் கலந்து ஆலோசித்து அளிக்கும்படி டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவிட்டுள்ளார்.
மேலும் அவர், அக்டோபர் 30ஆம் தேதி இரு புதிய காவல் ஆணையரங்களும் முழு அளவில் செயல்படும் என்று தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளார்.

ஆவடி, தாம்பரம் ஆணையரகங்களின் காவல் நிலையங்கள்

ஆவடி, தாம்பரம் ஆணையரங்களின் கீழ் இயங்கும் காவல் நிலையங்களின் பெயர் விவரத்தை டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவாக வெளியிட்டுள்ளார்.

 

Tags :

Share via