எது சாதனை?

by Admin / 30-07-2019
எது சாதனை?

தீபாவளி மது விற்பனை கடந்த ஆண்டை விட 70 கோடி அதிகம். இந்த ஆண்டு 330 கோடிக்கு மது விற்பனை செய்து சாதித்து இருக்கிறது தமிழகம்.

எது சாதனை?

பெருமைப்பட்டுக் கொள்ளும்படியான தகவலா இது?. அதிர்ச்சியையும், வேதனையையும் தருகிறது. 2016 சட்டப்பேரவை தேர்தலுக்கு சில மாதங்களுக்கு முன். முதல்வராக ஜெயலலிதா இருந்த நேரம். ஊர் ஊராக வீதி வீதியாக டாஸ்மாக்கிற்கு எதிராக தன்னெழுச்சியாக பெண்களும், ஆண்களும் திரண்ட நேரம். பல கடைகள் அடித்து உடைக்கப்பட்டன. தீ வைக்கப்பட்டன. மதுவுக்கு எதிராக தமிழகத்தின் கோபம் உக்கிரமாக இருந்தது. போலீசாரை வைத்து வழக்கம் போல் போராட்டத்தை முடக்கி விடலாம் என்ற ஜெயலலிதாவின் முயற்சி தோற்றுப்போனது. விளைவு, அதிமுக தேர்தல் அறிக்கையில் டாஸ்மாக் கடைகள் படிப்படியாக மூடப்படும் என்று அறிவிக்கும் அளவுக்கு வந்தது. அவர் 2016ல் மீண்டும் முதல்வராக பதவி ஏற்ற போது முதற்கட்டமாக 500 கடைகளை மூடும் உத்தரவில் கையெழுத்து போட வைத்தது மக்களின் அந்த கிளர்ச்சி. இந்த இரண்டரை ஆண்டுகளில் எங்கே போனது அந்த கோபம்?. ஜெயலலிதாவுக்கு எதிராகவே கிளர்ந்த மக்கள், அவரது மனதையே மாற்ற வைத்த போராட்டங்கள் எல்லாம் இந்த ஆண்டு தீபாவளி மது விற்பனையில் மூழ்கடிக்கப்பட்டு விட்டதே!. எங்கே சென்று கொண்டு இருக்கிறது தமிழகம்?. இன்னும் கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் வர இருக்கிறது. அப்போது இன்னும் அதிகமாய் குடித்து குடிகார சாதனையை கொண்டாட காத்திருக்கிறதா?. சிறுவர்கள் முதல் முதியவர்கள் வரை அனைவரையும் மதுவுக்கு அடிமையாக்கி அதன் மூலம் மது அடிமை மாநிலமாக தமிழகத்தை மாற்றி, சிந்திக்கக்கூட திறன் இல்லாத ஒரு சந்ததியை நாம் வளர்த்துக்கொண்டு இருக்கிறோமா என்ற கேள்வி வருகிறது. ஜெயலலிதா வழியில் ஆட்சி நடத்தும் அதிமுக, தேர்தல் வாக்குறுதிப்படி படிப்படியாக மதுக்கடைகளை மூடாதது ஏன்?. அதை தட்டிக்கேட்கும் உணர்ச்சி இன்றைய நிலையில் தமிழகத்திற்கு இருக்கிறதா?. டாஸ்மாக்கால் எத்தனை குடும்பங்கள் அழிந்து போய் இருக்கின்றன?. கணக்கு விவரங்கள் கண்ணீரை அல்லவா தருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில் டார்கெட் வைத்து தீபாவளி மது விற்பனை நடந்து இருக்கிறது. அதை எட்டி சாதனை புரிந்து விட்டதாக மார் தட்டுகிறது அரசு. சுகாதாரத்தில், கல்வியில், போக்குவரத்து வசதிகளில், வேலைவாய்ப்பில், ெதாழில்வளர்ச்சியில் என அத்தனை துறைகளிலும் அனைத்து மாநிலங்களையும் விஞ்சி விட்டதாக காட்டுங்கள். அதை விடுத்து மது விற்பனையில் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சாதித்து இருப்பதாக கூறுவது தமிழகத்திற்கு வேதனை.

Share via