8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

by Editor / 11-11-2021 05:36:22pm
 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை

வங்கக் கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு நிலை காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ள நிலையில், சென்னை உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது...

 
காற்றழுத்த தாழ்வு மண்டலம் வடமேற்கு திசையில் நகர்ந்து காரைக்காலுக்கும் ஸ்ரீஹரிகோட்டாவுக்கும் இடையே இன்று மாலை கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. இதனால் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர் மாவட்டங்களில்  

ஒரு சில இடங்களில் அதி தீவிர கனமழை பெய்யும் என தெரிவித்துள்ளது. இந்நிலையில் சென்னை, திருவள்ளூர், கள்ளக்குறிச்சி உள்ளிட்ட 8 மாவட்டங்களுக்கும், புதுச்சேரிக்கும்  இந்திய வானிலை ஆராய்ச்சி மையம் இன்று ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது

இம்மாவட்டங்களின் ஒரு சிலப் பகுதிகளில் அதி தீவிர கனமழை பெய்யும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் டெல்டா மாவட்டங்கள், கோவை, நீலகிரி, நாமக்கல் திருச்சி மாவட்டங்களில் கனமழை பெய்யும் எனவும் தெரிவித்துள்ளது
 
மற்ற மாவட்டங்களிலும் குறைவான மழைப்பொழிவு இருக்கும் எனவும் வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.

காற்றழுத்த தாழ்வு மண்டலம் கரையை கடக்கும் போது, கடற்கரையோர பகுதிகளில் மணிக்கு 30 கிலோ மீட்டர் வேகத்தில் காற்றுவீசும் எனவும், மழைப்பொழிவு அதிகமாக இருக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

வானிலை ஆய்வு மைய  அறிவிப்பைத் தொடர்ந்து எண்ணூர், கடலூர், நாகை மற்றும் காரைக்காலில் உள்ள துறைமுகங்களில் 3 ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

 

Tags :

Share via