தீபாவளி பண்டிகை பேருந்துகளில் 14.25 லட்சம் பேர் பயணம்.

by Admin / 11-11-2021 05:46:49pm
தீபாவளி பண்டிகை பேருந்துகளில் 14.25 லட்சம் பேர் பயணம்.

   தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பஸ்களில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 649 பயணிகள் பயணம் செய்து இருந்தனர்.

தீபாவளி பண்டிகையையொட்டி கடந்த 1-ந்தேதி முதல் 8-ந்தேதி வரை சிறப்பு பஸ்கள் தமிழகம் முழுவதும் இயக்கப்பட்டன. சிறப்பு பஸ்கள் மூலம் ஈட்டப்பட்ட வருவாய் மற்றும் பயணிகள் குறித்த தகவல்களை போக்குவரத்து துறை அமைச்சர் ராஜகண்ணப்பன் வெளியிட்டுள்ளார்.

சென்னையில் இருந்து 9,472 பஸ்கள் இயக்கப்பட்டது. அதில் 4 லட்சத்து 8 ஆயிரத்து 49 பேர் பயணம் செய்தனர். அதேபோல பல்வேறு பகுதிகளில் இருந்து பிற ஊர்களுக்கு 4,960 பஸ்கள் இயக்கப்பட்டு 2 லட்சத்து 96 ஆயிரம் பயணிகள் பயணம் செய்தனர்.

1-ந்தேதி முதல் 3-ந்தேதி வரை மொத்தம் 7 லட்சத்து 4 ஆயிரத்து 49 பேர் பயணம் செய்தனர். தீபாவளி முடிந்த பின்னர் 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் பல்வேறு ஊர்களில் இருந்து 10,987 பஸ்கள் இயக்கப்பட்டு 5 லட்சத்து 49 ஆயிரத்து 350 பயணிகளும், பல்வேறு இடங்களில் இருந்து பிற ஊர்களுக்கு 3,425 பஸ்கள் இயக்கப்பட்டு 1 லட்சத்து 71 ஆயிரத்து 250 பேர் பயணம் செய்தனர்.

மொத்தமாக 14,412 பஸ்கள் வாயிலாக 7 லட்சத்து 20 ஆயிரத்து 600 பேர் பயணம் செய்தனர். தமிழகம் முழுவதும் கடந்த 7 நாட்களில் மொத்தமாக இயக்கப்பட்ட 28,844 பஸ்களில் 14 லட்சத்து 24 ஆயிரத்து 649 பயணிகள் பயணம் செய்து இருந்தனர்.
 
தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 57 பேர் முன்பதிவு செய்து பயணம் செய்தனர். இதன் மூலம் ரூ.8 கோடியே 37 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

தீபாவளியையொட்டி கடந்த 1, 2, 3 மற்றும் 4 தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 17,694 தினசரி பஸ்களுடன் 966 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு 4 கோடியே 33 லட்சம் பேர் பயணம் செய்துள்ளனர். இதன் மூலம் ரூ.80 கோடியே 12 லட்சம் வருவாய் ஈட்டப் பட்டுள்ளது.

தீபாவளிக்கு பின்பு 5, 6, 7, 8 ஆகிய தேதிகளில் தமிழகம் முழுவதும் ஒட்டு மொத்தமாக சராசரியாக நாள் ஒன்றுக்கு 15,903 தினசரி பஸ்களுடன் 519 சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு 3 கோடியே 93 லட்சம் பேர் பயணம் செய்தனர். இதன் மூலம் ரூ.74 கோடியே 36 லட்சம் வருவாய் கிடைத்துள்ளது.

 

Tags :

Share via