வாக்கு எண்ணிக்கைக்கு தடை  விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

by Editor / 30-04-2021 05:13:23pm
வாக்கு எண்ணிக்கைக்கு தடை  விதிக்கக்கோரிய வழக்கு தள்ளுபடி

 

தமிழகத்தில் நாளை  நடைபெற உள்ள வாக்கு எண்ணிக்கைக்கு தடை விதிக்கக்கோரி, புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தாக்கல் செய்த மனுவை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்த கிருஷ்ணசாமி, சட்டமன்ற தேர்தலின்போது திமுக, அதிமுக சார்பில் பணப்பட்டுவாடா நடைபெற்றதாக அந்த மனுவில் குற்றம்சாட்டியிருந்தார்.
பணப்பட்டுவாடா தொடர்பாக தேர்தல் அதிகாரிகளிடம், ஏப்ரல் 20ஆம் தேதி, தாம் புகார் அளித்ததாகவும், அதன் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும், தமது மனுவில் கிருஷ்ணசாமி தெரிவித்திருந்தார். பணப்பட்டுவாடா தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதி அடங்கிய குழுவை அமைத்து, விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்றும், கிருஷ்ணசாமி கோரிக்கை விடுத்திருந்தார்.
இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி சஞ்சீப் பானர்ஜி, செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வு முன்பாக நடைபெற்றது. அப்போது உச்சநீதிமன்ற நீதிபதிகள் அடங்கிய குழுவை அமைக்க, உயர்நீதிமன்றமோ, தேர்தல் ஆணையமோ முடிவெடுக்க முடியாது, எனத் தெரிவித்த நீதிபதிகள், கிருஷ்ணசாமியின் மனுவை தள்ளுபடி செய்தனர்.

 

Tags :

Share via