ஐபிஎல் போட்டியை மும்பைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு?

by Editor / 24-07-2021 10:36:35am
ஐபிஎல் போட்டியை மும்பைக்கு மாற்ற பிசிசிஐ முடிவு?

ஐபிஎல் போட்டியில் கரோனாவின் தாக்கம் ஏற்பட்டுள்ளதால் மீதமுள்ள ஆட்டங்களை மும்பைக்கு மாற்ற பிசிசிஐ யோசித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. கரோனா சூழல் காரணமாக கடந்த வருட ஐபிஎல் போட்டி, ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்றது. இந்த வருடப் போட்டி இந்தியாவிலேயே நடத்தப்படுகிறது. சென்னை, மும்பை, கொல்கத்தா, ஆமதாபாத், தில்லி, பெங்களூர் ஆகிய ஆறு நகரங்களில் ஐபிஎல் போட்டி நடைபெறுகிறது.

கரோனா தொற்று அச்சம் காரணமாக, தொடக்க நிலை ஆட்டங்களில் ரசிகா்களுக்கு அனுமதி கிடையாது என பிசிசிஐ அறிவித்தது. ஆரம்பத்தில் சென்னை, மும்பையில் ஐபிஎல் ஆட்டங்கள் நடைபெற்றன. தற்போது ஆமதாபாத், தில்லியில் ஆட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

கொல்கத்தா நைட் ரைடா்ஸ் அணி வீரா்களான வருண் சக்கரவா்த்தி, சந்தீப் வாரியா் ஆகிய இருவருக்கும் கரோனா தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து கொல்கத்தா - பெங்களூா் அணிகள் நேற்று (திங்கள்கிழமை) இரவில் மோத இருந்த ஆட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. மிகக் கடுமையான கரோனா பாதுகாப்பு வளையத்தில் ஐபிஎல் போட்டி நடத்தப்பட்டு வருகிறது. இந்தச் சூழலில் வீரா்களுக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது இது முதல் முறையாகும். இதுவரை சுமூகமாக நடைபெற்று வந்த ஐபிஎல் போட்டியில் இந்த நிகழ்வு அணியினரிடையே தாக்கத்தை ஏற்படுத்த வாய்ப்புள்ளது.

சென்னை சூப்பா் கிங்ஸ் அணியின் தலைமை நிா்வாக அதிகாரி காசி விஸ்வநாதன், பந்துவீச்சு பயிற்சியாளா் எல்.பாலாஜி, அணியின் பேருந்து பராமரிப்பாளா் ஆகிய மூன்று பேருக்கும் கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக முதலில் தகவல் வெளியானது. விளையாடும் வீரா்கள் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை. எனினும் அடுத்தக்கட்ட பரிசோதனையில் மூவருக்கும் கரோனா இல்லை என்றும் தகவல் வெளியானது.

இதுகுறித்து அதிகாரபூர்வத் தகவல் எதுவும் இதுவரை வெளியிடப்படவில்லை. இதையடுத்து ஐபிஎல் போட்டியின் மீதமுள்ள ஆட்டங்களை ஒட்டுமொத்தமாக மும்பைக்கு மாற்றிவிட பிசிசிஐ யோசித்து வருகிறது. இதுகுறித்த ஆரம்பக்கட்ட ஏற்பாடுகளையும் செய்து வருவதாகத் தெரிகிறது. மும்பையில் வான்கடே, டிஒய் படேல், பிரபோர்ன் என மூன்று மைதானங்கள் உள்ளதால் அனைத்து ஐபிஎல் ஆட்டங்களையும் இவற்றில் நடத்திக்கொள்ள முடியும். இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை பிசிசிஐ விரைவில் வெளியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

Tags :

Share via