துப்புரவு தொழிலாளி தற்கொலை.....சம்பளம் கிடைக்காததால்

by Admin / 26-12-2021 12:39:38pm
துப்புரவு தொழிலாளி தற்கொலை.....சம்பளம் கிடைக்காததால்

கடந்த 2 ஆண்டாக சம்பளம் கிடைக்காததால் மாநகராட்சி துப்புரவு தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கு காரணமாக இருந்த 3 பேரை பணி இடைநீக்கம் செய்து மாநகராட்சி உத்தரவிட்டு உள்ளது.

மும்பை மாநகராட்சியின் திடக்கழிவு மேலாண்மை துறையில் துப்புரவு தொழிலாளியாக வேலை பார்த்து வந்தவர் ரமேஷ் பார்மர் (வயது27). இவர் கடந்த 21-ந் தேதி தனது வீட்டில் இருந்த போது விஷத்தை எடுத்து குடித்து விட்டார்.

இதனால் பெற்றோர் அவரை மீட்டு ஜோகேஸ்வரியில் உள்ள ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில் கடந்த 23-ந்தேதி சிகிச்சை பலனின்றி ரமேஷ் பார்மர் உயிரிழந்தார்.
 
இது பற்றி அறிந்த போலீசார், தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்தனர். கடந்த சில ஆண்டுக்கு முன்பு ரமேஷ் பார்மரின் தந்தை ஜெகதீஷ் மாநகராட்சியில் வேலை பார்த்து வந்தார். அவரது இறப்பிற்கு பின் வாரிசு அடிப்படையில் ரமேஷ் பார்மர் மாநகராட்சியில் துப்புரவு தொழிலாளியாக பணியாற்றி வந்தார். அங்கு வேலை பார்த்து வந்த அவருக்கு கடந்த 2 ஆண்டாக சம்பளம் கிடைக்கவில்லை.

இதனால் அவர் பொருளாதார நெருக்கடியில் சிக்கி வந்தார். இதன்காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.

இது பற்றி மாநகராட்சி உதவி கமிஷனர் சங்கீதா ஹசன்லே கூறுகையில், “ ரமேஷ் பார்மருக்கு கடந்த 2 ஆண்டாக சம்பளம் கிடைக்க நடவடிக்கை எடுக்காத துறை நிர்வாக அதிகாரி அனிதா நாயக், தலைமை குமாஸ்தா சமீரா மஞ்ரேக்கர், குமாஸ்தா பங்கஜ் ஆகிய 3 பேரை பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளனர். 

மேலும் உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தில் உள்ள நபருக்கு பணி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via