ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக ‘சாம்பியன்’ - இறுதிப்போட்டி மழையால் ரத்து

by Admin / 24-11-2018
ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கியில் இந்தியா, பாகிஸ்தான் கூட்டாக ‘சாம்பியன்’ - இறுதிப்போட்டி மழையால் ரத்து

மஸ்கட், 5-வது சாம்பியன்ஸ் கோப்பை ஆக்கி போட்டி ஓமன் தலைநகர் மஸ்கட்டில் நடந்தது. 6 அணிகள் பங்கேற்ற இந்த போட்டியில் இறுதி ஆட்டத்தில் நேற்று முன்தினம் இரவு நடப்பு சாம்பியன் இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோத இருந்தன. ஆனால் போட்டி தொடங்கும் முன்பே மழை பலமாக கொட்டித் தீர்த்தது. இதைத்தொடர்ந்து போட்டி அமைப்பு குழுவினர் இந்தியா மற்றும் பாகிஸ்தான் அணிகளின் பயிற்சியாளர்களுடன் கலந்து ஆலோசித்து போட்டியை ரத்து செய்வதாக அறிவித்தார்.

இதனால் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் கூட்டாக ‘சாம்பியன்’ பட்டத்தை கைப்பற்றின. இந்த போட்டி வரலாற்றில் இறுதிப்போட்டி ரத்து செய்யப்பட்டு இரு அணிகள் கூட்டாக ‘சாம்பியன்’ என்று அறிவிக்கப்படுவது இதுவே முதல்முறையாகும். இந்த போட்டி தொடரில் இந்தியா தோல்வியை சந்திக்காமல் இறுதிப்போட்டிக்கு முன்னேறி இருந்தது. அத்துடன் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 3-1 என்ற கோல் கணக்கில் பாகிஸ்தானை வீழ்த்தி இருந்தது குறிபிடத்தக்கது. இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ‘சாம்பியன்’ பட்டத்தை வெல்வது இது 3-வது முறையாகும். ஏற்கனவே இந்திய அணி 2011, 2016-ம் ஆண்டுகளில் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றி இருந்தது. பாகிஸ்தான் அணி 2012, 2013-ம் ஆண்டுகளில் பட்டத்தை வென்று இருந்தது. இந்திய அணி வீரர் ஆகாஷ்தீப் சிங் தொடர்நாயகன் விருது பெற்றார். இந்திய அணியின் கோல்கீப்பர் ஸ்ரீஜேஷ் சிறந்த கோல் கீப்பருக்கான விருதை தனதாக்கினார்.

Share via