அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு- உச்சநீதிமன்றம் உத்தரவு

by Editor / 12-02-2022 11:22:34am
அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு- உச்சநீதிமன்றம் உத்தரவு

அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கை ரத்து செய்த உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரான மேல்முறையீட்டு வழக்கில் தமிழக அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் பதில் அளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செந்தில் பாலாஜி போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த போது வேலை வாங்கித்தருவதாக கூறி, 81 பேரிடம் ரூ.1.62 கோடி மோசடி செய்ததாக தொடரப்பட்ட 3 வழக்குகளில் சென்னை சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இந்த வழக்கை ரத்து செய்ய கோரி குற்றம் சாட்டப்பட்டவர்களில் ஒருவரான சண்முகம் தாக்கல் செய்த மனுவை விசாரித்த உயர்நீதிமன்றம், பாதிக்கப்பட்டவர்கள் பணம் கிடைத்துவிட்டதாக கூறியும், சமரசமாக போக விரும்புவதாகவும் கூறியதை ஏற்றுக்கொண்டு செந்தில்பாலாஜி உட்பட 4 பேர் மீதான வழக்கை ரத்து செய்து, கடந்த ஆண்டு ஜூலை மாதம் உத்தரவிட்டது.

இந்நிலையில் உயர்நீதிமன்ற தீர்ப்பை ரத்து செய்யக்கோரி பொறியியல் பட்டதாரி தர்மராஜ் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். அதில் பணம் வாங்கி கொண்டு வேலை வழங்கிய செந்தில்பாலாஜியால் தகுதியானவர்கள் பணியில் சேர முடியவில்லை என மனுதாரர் தெரிவித்துள்ளார்.

சமூகத்தை பாதிக்கும் குற்றங்கள் தொடர்பான வழக்கை ரத்து செய்யக்கூடாது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு உள்ளதாகவும், ஆனால் குற்றத்தின் வீரியத்தை உணர்ந்தும் அரசு தரப்பு இந்த வழக்கில் சமரசத்தை ஏற்றுக் கொண்டதாகவும் மனுதாரர் கூறியுள்ளார். இந்த மனுவில் தமிழக அரசு மற்றும் குற்றம் சாட்டப்பட்டவர்கள் தரப்பு உள்ளிட்டோர் பதில் அளிக்குமாறு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

Tags : Case against Minister Senthil Balaji - Supreme Court order

Share via