இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

by Admin / 25-02-2022 10:43:41am
இம்ரான் கானுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

உலக நாடுகளின் கவனம் எல்லாம் உக்ரைன் மற்றும் ரஷியா மீது திரும்பி உள்ளது. ரஷியா போரைத் தவிர்க்குமா என்ற தவிப்பு உச்சத்தில் இருந்தபோது, நேற்று முன்தினம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் 2 நாள் அரசுமுறைப்பயணமாக ரஷியாவுக்கு புறப்பட்டுச்சென்றார்.
 
நேற்று காலை அவர் ரஷிய தலைநகர் மாஸ்கோவுக்கு போய்ச் சேர்ந்தார். அங்கு அவரை ரஷிய உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.23 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் பிரதமர் ஒருவர், ரஷியா சென்றிருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

இதற்கு இடையே உக்ரைன் மீதான ரஷியாவின் படையெடுப்பு தொடங்கி உலக நாடுகளை பலத்த அதிர்ச்சிக்கு ஆளாக்கி இருக்கிறது.முன்னதாக வாஷிங்டனில் அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் நெட் பிரைஸ், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவரிடம் இம்ரான்கான் மாஸ்கோ சென்றிருப்பது பற்றியும், அவர் ரஷிய அதிபர் விளாமிர் புதினைச் சந்தித்து பேசுவது குறித்தும் நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் ரஷிய பயணம் குறித்து அறிந்துள்ளோம்.உக்ரைன் மீதான ரஷியாவின் புதுப்பிக்கப்பட்ட படையெடுப்பு தொடர்பான எங்கள் நிலைப்பாட்டை நாங்கள் பாகிஸ்தானுக்கு தெரியப்படுத்தி உள்ளோம்.

மேலும் போர் தொடர்பான தூதரக ரீதியிலான எங்கள் முயற்சிகள் குறித்தும் நாங்கள் அவர்களுக்கு விளக்கி இருக்கிறோம்.உக்ரைன் மீதான ரஷியாவின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவிப்பது என்பது பொறுப்பான ஒவ்வொரு நாட்டின் கடமை ஆகும். உக்ரைன் விவகாரத்தில் அமெரிக்காவின் நிலைப்பாட்டை பாகிஸ்தானுக்கு தெரிவித்தாகி விட்டது.

பாகிஸ்தானுடனான தனது நீண்ட கால கூட்டாண்மை மற்றும் ஒத்துழைப்பை அமெரிக்காவின் நலன்களுக்கு முக்கியமானதாக அமெரிக்கா கருதுகிறது.அவரிடம் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கானின் ரஷிய பயணத்தின் நோக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர்‘இதுபற்றி பாகிஸ்தான் அரசிடம்தான் நீங்கள் கேட்க வேண்டும். வெளிநாட்டு தலைவர்கள், வேறொரு நாட்டுக்கு பயணம் செய்யும் தருணத்தை மதிப்பீடு செய்வதற்கு நான் இல்லை  என்று பதில் அளித்தார்.

ரஷிய படைகள், உக்ரைன் நாட்டுக்குள் நுழைந்துள்ள இந்த நெருக்கடியான தருணத்தில் ரஷிய அதிபர் புதினை சந்தித்துப்பேசும் முதல் உலகத்தலைவர் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான்தான்.
 

 

Tags :

Share via