காவல்துறை அதிரடி உத்தரவு பைக் மெக்கானிக்குகளுக்கு

by Staff / 22-03-2022 04:01:03pm
 காவல்துறை அதிரடி உத்தரவு  பைக் மெக்கானிக்குகளுக்கு

சென்னையில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் இருசக்கர வாகனங்களை ஓட்டும் நபர்களையும், பைக் ரேஸ் என்ற பெயரில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனங்களை ஓட்டி, சாகசத்தில் ஈடுபடும் நபர்களையும் கண்டறிந்து கைது நடவடிக்கைகள் மேற்கொள்ள சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார். அதனடிப்படையில் சென்னையின் முக்கிய இடங்களில் காவல் துறையினர் மூலம் தீவிர கண்காணிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு, இதுபோன்ற குற்றச் செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது கைது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் தொடர்ச்சியாக கடந்த 19 ஆம் தேதி நள்ளிரவு மயிலாப்பூர் ராதாகிருஷ்ணன் சாலையில் அபாயகரமான முறையில் தங்களது இருசக்கர வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட்ட இளைஞர்களின் வீடியோ வெளியாகி சமூக வலைதளங்களில் வைரலான நிலையில், அச்சம்பவம் தொடர்பாக அடையாறு போக்குவரத்து புலனாய்வுப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து சம்பவ இடத்திலுள்ள சி.சி.டி.வி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து விசாரணை மேற்கொண்டனர்.

அதனடிப்படையில், இருசக்கர வாகனத்தை வீலிங் செய்தபடி அபாயகரமான சாகசங்கள் செய்த திரு.வி.க நகரைச் சேர்ந்த  முகேஷ், ரோமன் அல்கிரேட், புரசைவாக்கத்தைச் சேர்ந்த ஹரிகரன், கொருக்கு பேட்டையைச் சேர்ந்த முகமது சாதிக்,  முகமது ரகமத்துல்லா, முகமது ஆசிப்  ஆகிய 6 பேரை போலீசார் இன்று கைது செய்துள்ளனர். மேலும் கைது செய்யப்பட்டவர்களுடன்  தொடர்புடைய இரு சிறுவர்களையும் பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

அவர்களிடமிருந்து விலையுயர்ந்த 6 இருசக்கர வாகனங்களையும் போலீசார் பறிமுதல் செய்து தலைமறைவாக உள்ள மேலும் 2 பேரை தீவிரமாகத் தேடி வருகின்றனர். சென்னை காவல் துறையினர் ஏற்கனவே பைக் ரேஸில் ஈடுபடுவது குறித்து அடிக்கடி எச்சரிக்கை விடுத்தும், பைக் ரேஸில் ஈடுபட்ட நபர்களை கைது செய்தும் வரும் நிலையில், கூடுதல் நடவடிக்கையாக இளைஞர்கள் மற்றும் சிறுவர்களின் பெற்றோர்களை வரவழைத்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தி எச்சரிக்கை செய்து நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். 

இந்நிலையில் இருசக்கர வாகனங்களை ரேஸில் ஈடுபடுவதற்கு ஏற்றார்போல் மாற்றியமைப்பது சட்ட விரோதமானது எனவும் அவ்வாறு மாற்றியமைக்கும் நபர்கள் தொடர்பான முழு விபரங்களை அனைத்து மெக்கானிக்குகளும் சென்னை காவல் துறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதேபோல இளைஞர்கள் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாகவும், அபாயகரமாகவும் வாகனங்களை ஓட்டி சாகசத்தில் ஈடுபட வேண்டாம் எனவும், மீறி   பைக் ரேஸில் ஈடுபடும் நபர்கள் மற்றும் இளஞ்சிறார்கள் மீது சட்டபூர்வமாக வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சென்னை காவல்துறை எச்சரித்துள்ளது.

மேலும், 18 வயது நிரம்பாத இளஞ்சிறார்கள் மோட்டார் வாகனங்களை இயக்குவது குற்றம் என்பதால் அவ்வாறு கண்டறியப்படும் இளஞ்சிறார்களின் பெற்றோர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவ்வாறு நிகழாமல் தங்கள் பிள்ளைகளை தொடர்ந்து பெற்றோர்கள் கண்காணிக்க வேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளது.
 

 

Tags :

Share via