இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொலை

by Staff / 30-03-2022 12:06:11pm
இளம்பெண்ணை கரம்பிடித்த 45 வயதான விவசாயி தற்கொலை

கர்நாடக மாநிலம் துமகூரு மாவட்டம் குனிகல் தாலுகா ஹிலியூர்துர்கா அருகே சவுடனகுப்பே கிராமத்தை சேர்ந்தவர் சங்கரண்ணா(வயது45). விவசாயி. இவர் கடந்த ஆண்டு(2021) அக்டோபர் மாதம் கணவரால் கைவிடப்பட்ட மேகனா(25) என்ற இளம்பெண்ணை உறவினர்கள் முன்னிலையில் கோவிலில் வைத்து திருமணம் செய்து கொண்டார். 

சங்கரண்ணா வயதான தோற்றம் உடையவராக இருந்ததால் 60 வயது முதியவர், 25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் தகவல்கள் வெளியானது.

மேலும் சங்கரண்ணா, மேகனா திருமண புகைப்படங்களும் சமூக வலைத்தளங்களில் வைரலாகின. திருமணத்திற்கு பின்னர் சங்கரண்ணாவும்-மேகனாவும் டிக்-டாக்கில் வீடியோ வெளியிட்டு வந்தனர். 

இந்த நிலையில் யார் கண்பட்டதோ தெரியவில்லை. சங்கரண்ணா தற்போது தற்கொலை செய்து கொண்ட அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. இதுபற்றிய பரபரப்பு தகவல்கள் பின்வருமாறு:-

அதாவது திருமணம் முடிந்த பின்னர் சங்கரண்ணாவும், மேகனாவும் சந்தோஷமாக வாழ்ந்து உள்ளனர். மேகனா தற்போது 4 மாத கர்ப்பமாக இருப்பதாகவும் கூறப்படுகிறது. 

இந்தநிலையில் கடந்த சில தினங்களாக மேகனாவுக்கும், சங்கரண்ணாவின் தாய்க்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்து உள்ளது. இதனால் மேகனா, சங்கரண்ணாவிடம் மைசூரு அல்லது பெங்களூருவுக்கு சென்று தனிக்குடித்தனம் நடத்தலாம் என்று கூறி உள்ளார்.

ஆனால் தாயை பிரிந்து வர மாட்டேன் என்று சங்கரண்ணா கூறியதாக சொல்லப்படுகிறது. இதுதொடர்பாக சங்கரண்ணா, மேகனா இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்ததாகவும் கூறப்படுகிறது. அதுபோல் நேற்று முன்தினம் கணவன்-மனைவி இடையே சண்டை ஏற்பட்டுள்ளது. 

இதனால் மனம் உடைந்து காணப்பட்ட சங்கரண்ணா நேற்று முன்தினம் இரவு வீட்டில் இருந்து வெளியேறி அக்கிமிதிபாளையா என்ற கிராமத்தில் ஒரு மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றி அறிந்ததும் அங்கு சென்ற மேகனாவும், சங்கரண்ணாவின் தாயும் சங்கரண்ணாவின் உடலை பார்த்து கதறி அழுதனர்.

இந்த நிலையில் சங்கரண்ணா சாவுக்கு மேகனா தான் காரணம் என்றும், சங்கரண்ணாவை மேகனா தற்கொலைக்கு தூண்டியதாகவும் ஹிலியூர்துர்கா போலீஸ் நிலையத்தில் சங்கரண்ணாவின் தாய் புகார் அளித்து உள்ளார். 

அந்த புகாரின்பேரில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். இதுபோல் எனது கணவரின் சாவுக்கு அவரது தாய் தான் காரணம் என மேகனா குற்றம்சாட்டியுள்ளார்.

 

Tags :

Share via