21 குண்டுகள் முழங்க கி.ரா உடல் நல்லடக்கம் !

by Editor / 19-05-2021 02:52:59pm
21 குண்டுகள் முழங்க கி.ரா உடல் நல்லடக்கம் !

பிரபல எழுத்தாளர் கி.ரா வயது மூப்பு காரணமாக காலமானார். இவர் 1923ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 16ஆம் தேதி பிறந்தார். இவரது சொந்த ஊர் கோவில்பட்டி அருகே உள்ள இடைசெவல் கிராமம்.இவரின் கதையுலகம் கரிசல் வட்டாரத்து மக்களின் நம்பிக்கைகளையும், ஏமாற்றங்களையும், வாழ்க்கைப்பாடுகளையும் விவரிப்பதால், கரிசல் இலக்கியத்தின் தந்தை என்று அழைக்கப்படுகிறார்.

கி.ரா. சாக்திய அகாடமி விருது, இலக்கிய சிந்தனை விருது, தமிழக அரசின் விருது, கனடா தமிழ் இலக்கியத் தோட்டத்தின் 2016ஆம் ஆண்டுக்கான தமிழ் இலக்கியச் சாதனை விருது உள்ளிட்ட தமிழின் முக்கிய இலக்கிய விருதுகள் பெற்றுள்ளார்.புதுச்சேரியில் வசித்து வந்த நிலையில் வயது மூப்பு காரணமாக தனது 99 வயதில் கி.ராஜநாராயணன் உயிரிழந்தார். இவரது மறைவிற்கு அரசியல் தலைவர்களும் சினிமா பிரபலங்களும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், கி.ரா.வின் உடல் நேற்றிரவு புதுச்சேரியிலிருந்து கோவில்பட்டியில் உள்ள அவரது சொந்த ஊரான இடைசெவலுக்கு கொண்டு வரப்பட்டது. கனிமொழி எம்.பி., சபாநாயகர் அப்பாவு, அமைச்சர்கள் அனிதா ராதாகிருஷ்ணன், தங்கம் தென்னரசு, எம்.எல்.ஏ., மார்க்கண்டேயன், சாத்தூர் எம்.எல்.ஏ. மருத்துவர் ரகுராமன், வாசுதேவநல்லூர் எம்.எல்.ஏ., சதன் திருமலைக்குமார், மதிமுக பொதுச் செயலாளர் வைகோவின் மகன் துரை வையாபுரி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

இறுதிச்சடங்குகள் முடிந்தபின் எழுத்தாளர் கி.ரா.வின் உடலுக்கு தமிழக அரசு சார்பில் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க போலீசார் முழு மரியாதை செய்தனர்.தமிழக வரலாற்றில் எழுத்தாளர் ஒருவருக்கு முழு அரசு மரியாதை அளிக்கப்பட்டது இதுவே முதல் முறை

 

Tags :

Share via