சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்: டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்!

by Editor / 20-05-2021 07:34:39am
சித்த மருத்துவ கொரோனா சிகிச்சை மையம்:  டி.ஆர்.பாலு தொடங்கி வைத்தார்!

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் இரண்டாவது சித்த மருத்துவ கரோனா சிகிச்சைமையம் 150 படுக்கை வசதிகளுடன் குரோம்பேட்டையில் வைஷ்ணவா கல்லூரியில் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார்.

தாம்பரம் தேசிய சித்த மருத்துவ நிறுவனம் சார்பில் ஏற்கெனவே 100 படுக்கை வசதியுடன் கரோனா பரிசோதனையில் லேசான அறிகுறிஉள்ளவர்களுக்கு சித்த மருத்துவ முறையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், குரோம்பேட்டை வைஷ்ணவா மகளிர் கல்லூரியில் 150 படுக்கை வசதியுடன் கூடிய சித்த மருத்துவ சிகிச்சை மையம் நேற்று தொடங்கி வைக்கப்பட்டது.

ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினர் டி.ஆர். பாலு சிகிச்சை மையத்தை தொடங்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் ஊரகத் தொழில் துறை அமைச்சர் தா.மோ. அன்பரசன், செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் அ.ஜான் லூயிஸ், தாம்பரம் தேசிய சித்த மருத்துவமனை இயக்குநர் மீனாகுமாரி மருத்துவமனை கண்காணிப்பாளர் கிறிஸ்டியன், தாம்பரம் கோட்டாட்சியர் ரவிச்சந்திரன், சட்டப்பேரவை உறுப்பினர்கள் தாம்பரம் எஸ்.ஆர். ராஜா, பல்லாவரம் இ.கருணாநிதி உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலு செய்தியாளர்களிடம் கூறியதாவது: செங்கை மாவட்ட நிர்வாகமும் சுகாதாரத் துறையும் சிறப்பாக பணியைசெய்து கரோனா கட்டுப்படுத்த தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனைகளில் 824 ஆக்சிஜன் படுக்கை வசதிகளுடன் மொத்தம் 1,404 படுக்கைகள் உள்ளன. தனியார் மருத்துவமனைகளில் 1,478 ஆக்சிஜன் படுக்கைகளையும் சேர்த்து மொத்தம் 3,662 படுக்கைகள் உள்ளன. மாவட்டத்தில் மொத்தம் 5,066 படுக்கைகள் உள்ளன. குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் கூடுதலாக ஆக்சிஜன் வசதியுடன் படுக்கை வசதி செய்யப்படும். பல்வேறு மாநிலங்களில் இருந்து ஆக்சிஜன் கொண்டு வரப்படுகிறது. அதற்காக அமைச்சர்கள் 24 மணி நேரமும் பணியாற்றுகிறார்கள் என்றார்.

 

Tags :

Share via