மணல் அள்ளும் இடங்களில் சிசிடிவி கேமரா  ஆர். நல்லகண்ணு  வழக்கில் தீர்ப்பு 

by Editor / 25-05-2021 06:10:32pm
 மணல் அள்ளும் இடங்களில் சிசிடிவி கேமரா  ஆர். நல்லகண்ணு  வழக்கில் தீர்ப்பு 



இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவர் ஆர்.நல்லகண்ணு 2015ஆம் ஆண்டு தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென்மண்டல அமர்வில் பொதுநல மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில், “வைகுண்டம் அணையில் தூர் வாரும் பணி என்ற பெயரில் விதிகளை மீறி மணல் அள்ளப்பட்டு வருகிறது. இதனால் சுற்றுச்சூழல் கடுமையாகப் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. எனவே, அறிவியல் முறையில் தூர் வார அரசுக்கு உத்தரவிட வேண்டும். இங்கு தூர் வாரும் பணியைக் கண்காணிக்க உள்ளூர் பிரதிநிதிகள் இடம்பெற்ற குழு ஒன்றை அமைக்க வேண்டும். விதிகளை மீறி தூர் வாருவதைத் தடுக்க வேண்டும்” என்று குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனு நீதித்துறை உறுப்பினர் கே.ராமகிருஷ்ணன், தொழில்நுட்ப உறுப்பினர் கே.சத்யகோபால் ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது அவர்கள் தீர்ப்பு வழங்கினர்.
 அதன் விவரம் பின்வருமாறு: “அணைகள், ஏரிகள், ஆறுகளில் விதிகளை மீறி மணல் அள்ளுவதை அனுமதிக்கக் கூடாது. மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் வழங்கிய வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றியே தூர் வார வேண்டும். தமிழக அரசு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை (2006) விதிகளுக்கு உட்பட்டு மணல் அள்ள அனுமதிக்கலாம். தூர்வாருதல் தொடர்பாக கட்டுப்பாடு மற்றும் கண்காணிப்பு நெறிமுறைகளை தற்கால தொழில்நுட்ப முறைகளின்படி உருவாக்க வேண்டும்.
தூர் வாரும் பணியில் ஏற்கெனவே பதிவு செய்யப்பட்ட, ஜிபிஎஸ் கருவி பொருத்தப்பட்ட வாகனங்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். விதிகளை மீறி மணல் அள்ளும் செயலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். தூர்வாருவதை முறைப்படுத்த மாவட்ட அளவில் ஆட்சியர் தலைமையில் புவியியல் துறை, பொதுப்பணித்துறை, நீர்ப்பசனத்துறை அதிகாரிகளைக் கொண்ட நிரந்தர மதிப்பீட்டு வல்லுநர் குழுக்களை அமைக்க வேண்டும். தூர் வாரும் இடங்களில் சிசிடிவி கேமராக்களை நிறுவி அறிவியல் முறையில் தூர் வாரப்படுகிறதா, விதிகளை மீறி மணல் அள்ளப்படுகிறதா என கண்காணிக்க வேண்டும்” என அத்தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via