தனியார் பள்ளியில் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்-அமைச்சர்

by Editor / 25-07-2022 08:22:11pm
தனியார் பள்ளியில் புதன்கிழமை முதல் ஆன்லைன் வகுப்புகள் தொடங்கும்-அமைச்சர்

கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலத்தை அடுத்த கனியாமூர் சக்தி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளியில் படித்த பிளஸ் 2 மாணவி ஸ்ரீமதி உயிரிழந்த நிலையில், அவரது உயிரிழப்புக்கு நியாயம் கேட்டு கடந்த 17-ம் தேதி பள்ளியில் பெரும் வன்முறை நிகழ்ந்தது. 

மேலும் பள்ளியில் உடமைகளுக்கு தீ வைத்து எரிக்கப்பட்டு பள்ளி இயங்க முடியாத சூழல் உருவாகியுள்ளது. இதனால் அப்பள்ளியில் பயின்ற 3,194 மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியான நிலையில் பள்ளியில் பயின்ற மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு குறித்து பள்ளிக் கல்வித்துறையின் ஆலோசனையின் பேரில் மாவட்ட நிர்வாகம் ஆலோசனை நடத்தி வந்தது.
 
இதன் தொடர்ச்சியாக கள்ளக்குறிச்சிக்கு வந்த பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் ஆலோசனை நடத்தினார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், பள்ளியில் நடைபெற்ற விரும்பத்தகாத நிகழ்வு வருத்தமளிக்கிறது என்றார். இருப்பினும் அப்பள்ளியில் பயின்ற 2,694 மெட்ரிக் மற்றும் 500 சிபிஎஸ்இ பிரிவு மாணவர்களுக்கு மாற்று ஏற்பாடு குறித்து முதலமைச்சரும் சில ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.
 

அதன்படி மாணவர்களுக்கு கல்வி போதிக்கும் இடைவெளி தொடரக்கூடாது தற்போது சில உடனடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளோம். அனைத்து மாணவர்களுக்கு பள்ளியில் பணியாற்றிய ஆசிரியர்களைக் கொண்டு முதற்கட்டமாக ஆன்லைன் வகுப்புகள் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த வகுப்புகள் நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் தொடங்கும். இதையடுத்து, 9 முதல் பிளஸ் 2 வரை பயிலும் மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கு சக்தி மெட்ரிக் மற்றும் சிபிஎஸ்இ பள்ளி அருகாமையில் உள்ள சில தனியார் பள்ளிகளுடன் ஆலோசனை நடத்தியதில், அவர்களும் ஒப்புக்கொண்டதன் பேரில், 15 வகுப்புகள் தயார் நிலையில் உள்ளது. அதில் வகுப்புகள் தற்காலிகமாக நடைபெறும். இந்த வகுப்புகளும் சக்தி மெட்ரிக் மேநிலைப்பள்ளி ஆசிரியர்களைக் கொண்டே நடத்தப்படும். 50 பேருந்துகளை வழங்க தனியார் பள்ளி கூட்டமைப்பு முன்வந்துள்ளது.

 இதனிடையே நாளை பெற்றோர் ஆசிரியர் கூட்டம் நடத்தப்பட்டு, பெற்றோர்களின் கருத்தையும் அறிந்து, அவர்களது விருப்பத்தின் பேரிலே மாணவர்களுக்கு வகுப்புகள் நடத்த முடிவுசெய்துள்ளோம் என தெரிவித்தார். 

 

Tags : Private school to start online classes from Wednesday-Minister

Share via