9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கோபுர கட்டிடம் 9 நொடியில் தரைமட்டம்.

by Editor / 28-08-2022 05:09:07pm
9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட  இரட்டை கோபுர கட்டிடம் 9 நொடியில் தரைமட்டம்.

உத்தரப் பிரதேசத்தில் உள்ள நொய்டாவில் சூப்பர்டெக் என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் 40 அடுக்குமாடிக் குடியிருப்புகள் கொண்ட இரட்டை கோபுரத்தைக் கட்டியது. சுமார் 7,000 பேர் தங்கும் வசதி கொண்ட இந்த குடியிருப்பில் இதுவரை யாரும் குடியேறவில்லை. இதில் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் 32 தளங்களும், மற்றொன்றில் 29 தளங்களும் உள்ளன.

இந்நிலையில், இந்த கட்டுமானமானது சுற்றுச்சூழல் விதிகளுக்குப் புறம்பானது எனப் புகார் எழுந்தது. இது தொடர்பான வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. விசாரணையில் இந்த அடுக்குமாடி கட்டிடமானது கட்டுமான விதிகளை மீறிக் கட்டப்பட்டுள்ளது தெரியவந்தது. இதையடுத்து கடந்தாண்டு கட்டிடங்களை வெடி வைத்துத் தகர்க்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதை வெடிவைத்துத் தகர்க்கும் பணி எடிபைஸ் இன்ஜினியரிங் என்ற தனியார் நிறுவனத்திடம் ஒப்படைக்கப்பட்டது.

அதன்படி இன்று மதியம் 2.30 மணிக்கு இரட்டை கோபுர கட்டடம் இடிக்கப்பட்டது. இதற்குமுன்னதாக இரட்டை கோபுர கட்டடத்தின் அருகே உள்ள 5ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டனர். மேலும் அப்பகுதியிலிருந்த சுமார் 1,500 வாகனங்கள் அப்புறப்படுத்தப்பட்டன. இரட்டை கோபுர தகர்ப்பையொட்டி இன்று நொய்டாவில் குறிப்பிட்ட பகுதியில் ‘டிரோன்கள்’ பறக்கத் தடைவிதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. தகர்ப்பு வேளையில் 1 நாட்டிகல் மைல் தூரத்துக்கு வான்வெளியில் விமானம் பறப்பதற்கும் தடை விதிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

மேலும், பாதுகாப்புப் பணியில் சுமார் 560 போலீசார், 100 ரிசர்வ் படைகள், 4 என்டிஆர்எஃப் குழு ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். கட்டிடத்தை இடிப்பதற்காக சுமார் 3 ஆயிரத்து 700 கிலோ வெடிபொருள்கள் பயன்படுத்தப்பட்டது. இரட்டை கோபுரத்தை இடித்தபின் கழிவுகளை எடுத்துச் செல்ல 1200 டிப்பர் லாரிகள் தயார் நிலையில் உள்ளன. 9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட இரட்டை கட்டிடம் 9 நொடியில் தரைமட்டமாக்கப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதி புகை சூழ்ந்து காணப்படுகிறது.

9 ஆண்டுகளாகக் கட்டப்பட்ட  இரட்டை கோபுர கட்டிடம் 9 நொடியில் தரைமட்டம்.
 

Tags :

Share via