பாமகதான் உண்மையான எதிர்க்கட்சி: அன்புமணி ராமதாஸ்

by Staff / 17-09-2022 02:09:41pm
பாமகதான் உண்மையான எதிர்க்கட்சி: அன்புமணி ராமதாஸ்

விழுப்புரம் மாவட்டம், தைலாபுரத்தில் அமைந்துள்ள பாமக அரசியல் பயிலரங்கத்தில்
உள்ள பெரியார் சிலைக்கு 144-ஆவது பிறந்தநாளையொட்டி, பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் அன்புமணி ராமதாஸ் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். இதைத்தொடர்ந்து திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அலுவலகத்தில் இட ஒதுக்கீடு போராட்டத்தில் உயிரிழந்த 21 தியாகிகளின் நினைவு நாளை முன்னிட்டு உருவப்படத்திற்கு மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினார்.

அதைத்தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பில் அன்புமணி பேசுகையில், முந்தைய ஆட்சியில் 20 விழுக்காடு பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு கொடுக்கப்பட்டது. தொடர் போராட்டம் காரணமாக வன்னியர்களுக்கு 10.5 சதவீத இட ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆனால், நீதிமன்றம் அதனை ரத்து செய்தது. இருப்பினும் உயர்நீதிமன்றம் ரத்து செய்த ஏழு காரணங்களில் ஆறு காரணங்கள் தவறானது என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. தீர்ப்பு வந்து ஐந்துமாதங்கள் ஆகியும் திமுக அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. இது சாதி பிரச்சனை இல்லை சமூக நீதி பிரச்சனை.

தமிழகத்தில் இரு பெறும் சமூகங்களான தாழ்த்தப்பட்ட மற்றும் வன்னியர்
சமூகம் பின் தங்கியுள்ளனர் இந்த இரு சமூகங்களும் முன்னேறினால் தமிழ்நாடு
முன்னேறும். ஸ்டாலின் அவர்களிடம் மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ள
சட்டமன்றத்திலேயும், வெளியேயும் ஸ்டாலின் வாக்குறுதி கொடுத்துள்ளார்.
தொடர்ந்து பாமக சார்பில் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம். தமிழக அரசு
விரையில் சட்டம் கொண்டு வருவார்கள் என எதிர்ப்பார்கிறோம். தமிழக அரசு 105
சதவீத இடஒதுக்கீட்டை உரிய தரவுகளுடன் அவசர சட்டத்தை சட்டமன்றத்தில் இயற்ற வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.

மின்சார கட்டண உயர்வை சிறிதளவும் ஏற்க முடியாது. அமைச்சர் கூறும் காரணங்கள் வேடிக்கையான காரணங்கள். ஒன்றரை ஆண்டுக்கு முன்பு போராடிய திமுக ஆட்சிக்கு வந்த பிறகு வேறொரு நிலைப்பாடு எடுக்கிறார்கள். கொரோனாவுக்கு பிறகு பொது மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் மின் கட்டண உயர்வை ஏற்க முடியாது. மக்களுக்கு அது மிகப்பெரிய சுமையாக உள்ளது. இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மின் கட்டணம் குறைவு என அமைச்சர் சொல்லும் காரணம் பொய்யானது. அதனை ஏற்க முடியாது, மின் கட்டணத்தை குறைக்கவில்லை என்றால் பாமக சார்பில் கடுமையான போராட்டம் நடத்தப்படும்.

கொலை குற்றங்கள், பாலியல் சீண்டல்களுக்கு காரணமாக இருப்பது மது மற்றும் போதைப் பொருட்கள் தான். இது தொடர்பாக சமீபத்தில் பல்வேறு ஆய்வுகள் நடைபெற்றது. அதில் அதிக அளவில் விதவைகள் இருக்கும் மாநிலமாக தமிழகம் உள்ளது. அதிக அளவில் விபத்து, மன நோயாளிகள் மற்றும் தற்கொலைகள் அதிகம் நடைபெறும் மாநிலமாக தமிழகம் உள்ளது. மேலும், குழந்தைகள் மற்றும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அதிக அளவில் தமிழகத்தில் தான் நடைபெறுகிறது என ஆய்வு முடிவு ஒன்று தெரிவித்துள்ளது.

ஆன்லைன் சூதாட்டங்களைத் தடை செய்வதற்கு முதல்வர் ஏன் இன்னும் இத்தனை தாமதம் காட்டி வருகிறார். விரைவில் இதற்கான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்குக்குப் பிறகு 5,000 காவலர்கள் மட்டுமே உள்ளனர். காவலர்களை அதிகப்படுத்தினால் மட்டுமே இதுபோன்ற குற்றங்கள் குறைக்கப்படும்.திமுக, அதிமுக இரு கட்சிகளும் ஆட்சி வரும்போது மாறிமாறி சோதனைசெய்கிறார்கள். ஆனால், வழக்கு என்ன ஆகிறது என்றுதான் தெரியவில்லை. சோதனை என்பது அரசியல் ஆகிவிட்டது. குறைவாக சட்டமன்ற உறுப்பினர்கள் இருந்தாலும் பாமக தான் உண்மையான எதிர்கட்சி. அதற்கு உதாரணம் மற்ற கட்சிகள் சொல்வதை அரசுகள் நிறைவேற்றுவதில்லை. பாமக சொல்வதை அரசு நடைமுறைப்படுத்தி வருகிறது என்றார்.

 

Tags :

Share via