விபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனத்துடன் தப்பிய பலே திருடன்

by Admin / 13-11-2018
விபத்து நடந்த இடத்தில் போலீஸ் வாகனத்துடன் தப்பிய பலே திருடன்

திருக்கோவிலூர்: திருக்கோவிலூர் அருகே விபத்து சம்பவத்தை பயன்படுத்தி போலீஸ் வாகனத்தை ஓட்டிச்சென்று பைக் திருடன் தப்பிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

விழுப்புரம் மாவட்டம் திருக்கோவிலூர் அடுத்த அடுக்கம் கிராமத்தை சேர்ந்த விவேகானந்தன் மகள் வினிதா- சு. பில்ராம்பட்டு காசி மகன் அரசுதுரை ஆகியோருக்கு கடந்த வெள்ளிக்கிழமை திருமணம் நடந்தது. அப்போது, வினிதாவின் பெற்றோர் அரசுதுரைக்கு வரதட்சணையாக புதிய பைக் ஒன்றை வாங்கி கொடுத்துள்ளனர். இந்நிலையில் கடந்த சனிக்கிழமை அரசுதுரையின் மாமனார் வீட்டில் இருந்த புதிய பைக் மாயமானது. இதுகுறித்த புகாரின்பேரில் கண்டாச்சிபுரம் போலீசார் விசாரித்து வந்தனர். இதனிடையே அடுக்கம் கிராமத்தை ேசர்ந்த அண்ணாமலை(30) என்பவரை சந்தேகத்தின் பேரில் போலீசார் பிடித்து விசாரித்தனர். அதில், பைக் திருடியதை அண்ணாமலை ஒப்புக்கொண்டார்.அவர் அளித்த தகவலின் பேரில், நேற்று காலை, அண்ணாமலையை சப்- இன்ஸ்பெக்டர் நரசிம்மஜோதி, காவலர் பாரதி, கார் டிரைவர் சபா என்பவருடன் போலீஸ் வாகனத்தில் கீழ்பென்னாத்தூர் அருகே உள்ள பாப்பம்பாடி என்ற இடத்திற்கு அழைத்து சென்றனர். முன்னதாக சாணிபூண்டி என்ற இடத்தில் சென்றபோது, அங்கு ஒரு சாலை விபத்து ஏற்பட்டது. இதையடுத்து, விபத்து குறித்து விசாரிக்கவும், விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றவும், சப்- இன்ஸ்பெக்டர், காவலர் மற்றும் கார் டிரைவர் ஆகியோர் குற்றவாளி அண்ணாமலையை மட்டும் காரில் விட்டு விட்டு சென்றனர். சற்று நேரத்தில் போலீசார் வந்து பார்த்தபோது, போலீஸ் வாகனத்தையும், அண்ணாமலையையும் காணவில்லை. சுமார் அரை கிலோ மீட்டர் தூரத்திற்கு அப்பால் போலீஸ் வாகனம் நின்றது தெரியவந்தது. போலீசார் அங்கு சென்று பார்த்த போது, அண்ணாமலையை காணவில்லை. வாகனத்தை ஓட்டிச்சென்று அண்ணாமலை தப்பியது தெரியவந்தது. போலீசுக்கு டிமிக்கி கொடுத்து விட்டு காவல்துறை வாகனத்திலேயே தப்பிய அண்ணாமலையை தேடி வருகின்றனர்.

Share via