பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

by Staff / 28-10-2022 02:43:22pm
 பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை

கேரளாவின் கோட்டயம் மாவட்டத்தில் ஆப்பிரிக்க பன்றிக் காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கோட்டயம் மீனச்சில் பஞ்சாயத்தில் ஆப்பிரிக்க பன்றிக்காய்ச்சல் பரவியிருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அப்பகுதியில் பன்றி இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கப்பட்டது. நோய் உறுதி செய்யப்பட்ட பன்றிப் பண்ணையைச் சுற்றி ஒரு கிலோமீட்டர் பரப்பளவு பாதிக்கப்பட்ட பகுதியாகவும், பத்து கிலோமீட்டர் சுற்றளவு நோய் கண்காணிப்பு மண்டலமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மாவட்ட பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தலைவரான மாவட்ட ஆட்சியர் பி.கே. ஜெயஸ்ரீ தெரிவித்துள்ளார். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து பன்றி இறைச்சி விநியோகம் மற்றும் விநியோக கடைகளின் செயல்பாடும் நிறுத்தப்பட்டுள்ளது. இங்கிருந்து மாவட்டத்தின் பிற பகுதிகளுக்கும், பிற இடங்களில் இருந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கும் பன்றிகள், பன்றி இறைச்சி மற்றும் தீவனங்கள் கொண்டு செல்வதை நிறுத்தவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்ட பன்றிப் பண்ணையில் உள்ள அனைத்து பன்றிகளையும் ஒரு கிலோ மீட்டர் சுற்றளவில் அழித்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க மாவட்ட கால்நடை நல அலுவலருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. கடந்த 2 மாதங்களுக்குள் நோய் பாதித்த பண்ணைகளில் இருந்து மற்ற பன்றி பண்ணைகளுக்கு பன்றிகள் கொண்டு செல்லப்பட்டதா என்பது குறித்து ஆய்வு செய்யப்படும்.

இந்நோய் உறுதி செய்யப்பட்ட உள்ளாட்சிப் பகுதியில், காவல்துறை, கால்நடை நலத் துறை, கிராம, உள்ளாட்சித் துறை செயலர்கள் இணைந்து விரைவுப் படை அமைக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் மற்ற இடங்களில் வைரஸ் தொற்று கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட கால்நடை மருத்துவ அதிகாரிக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு, பரவாமல் தடுக்க கால்நடை நல அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

 

Tags :

Share via