3 மாதத்துக்குள் உள்ளாட்சித்  தேர்தலை  நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு

by Editor / 22-06-2021 03:58:44pm
 3 மாதத்துக்குள் உள்ளாட்சித்  தேர்தலை  நடத்த வேண்டும் : உச்ச நீதிமன்றம் உத்தரவு


தமிழகத்தில் வரும் செப்டம்பர் 15ஆம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் ஊரகம், நகர்புறம் என, இரு வகையான உள்ளாட்சி அமைப்புகள் உள்ளன. அவற்றில் 1.50 லட்சத்திற்கும் மேற்பட்ட பதவிகள் உள்ளன. உள்ளாட்சி அமைப்புகளுக்கான பதவி காலம் 2016ல் நிறைவடைந்தது.இதையடுத்து, 2019 டிசம்பர் 2ஆம் தேதி ஊரக பகுதிகளுக்கு மட்டும் உள்ளாட்சித் தேர்தல் நடத்தப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து திமுக சார்பில் வழக்குத் தொடரப்பட்டது.அதில், புதிதாக 5 மாவட்டங்கள் உருவாக்கப்பட்டிருப்பதால், 9 மாவட்டங்களின் எல்லைகள் மாறியிருக்கின்றன. அந்த மாவட்டங்களில் உள்ள தொகுதிகளை மறுவரையறை செய்ய வேண்டும். மேலும், ஊரகப் பகுதிகளுக்கு மட்டும் தேர்தலை நடத்தாமல் மாநிலம் முழுவதும் தேர்தலை நடத்த வேண்டும் என கோரப்பட்டது.
இவ்வழக்கில் தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, செங்கல்பட்டு, திருவள்ளூர், வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களில் வார்டு மறுவரையறை உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடத்தப்படாமல் இருப்பதால் மற்ற 27 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தவும், இந்த 9 மாவட்ட தேர்தல் பணிகளை விரைந்து முடித்து 4 மாதங்களில் தேர்தல் நடத்தவும் உத்தரவிட்டது.
ஆனால் கொரோனா பரவல் காரணமாக இந்த 9 மாவட்டங்களுக்குத் தேர்தல் நடத்தப்படாமல் உள்ளது. 
இந்நிலையில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்குவிசாரணைக்கு வந்த போது, மாநில தேர்தல் ஆணையம் சார்பில் இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் கொரோனா பரவல் அதிகமாக உள்ளது. கொரோனா பரவல் குறைந்ததும் தேர்தல் நடத்துவதற்கான பணிகள் நடைபெறும்” என்று தெரிவிக்கப்பட்டது.
இதை விசாரித்த நீதிபதி ஹேமந்த் குப்தா தலைமையிலான அமர்வு, எதற்கெடுத்தாலும் கொரோனாவை காரணமாகச் சொல்ல வேண்டாம். ஏற்கனவே பல முறை கால அவகாசம் வழங்கப்பட்டுவிட்டது. மேலும் 3 மாதம் கால அவகாசம் தருகிறோம். செப்டம்பர் 15ஆம் தேதிக்கு 9 மாவட்டங்களில் உள்ளாட்சித் தேர்தலை நடத்தி அதற்கான முடிவை தெரிவிக்க வேண்டும் என்றார் 

 

Tags :

Share via