செங்கோட்டை அருகே தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் போராட்டம் 

by Editor / 23-06-2021 05:05:49pm
செங்கோட்டை அருகே தண்ணீர் தொட்டி மீது ஏறி பெண் போராட்டம் 

 

 செங்கோட்டை அருகே உள்ள புளியரையில் தாட்கோ நகரில் குடியிருப்பவர், ஃபிரான்சிஸ் அந்தோணி. மாற்றுத்திறனாளியான இவர் ரேஷனில் வாங்கிய அரிசியை சைக்கிளில் எடுத்துக்கொண்டு தன் சகோதரரின் வீட்டுக்குச் சென்றுள்ளார்.
சாலையில் அவரை வழிமறித்த செங்கோட்டை காவல்துறையினர், அவரிடம் 'சைக்கிளில் ரேஷன் அரிசி கடத்துகிறாயா?' எனக் கேட்டுள்ளனர். அவர் ரேஷனில் சொந்த உபயோகத்துக்காக வாங்கிய அரிசி என எடுத்துச்சொல்லியும் கேட்காமல் அவரை காவல் நிலையத்துக்கு அழைத்துச்சென்று  அடித்ததுடன், ரேஷன் அரிசி கடத்தியதாக பொய்யாக வழக்கு பதிவு செய்துள்ளனர் என கூறப்படுகிறது.
போலீஸாரின் தாக்குதலில் காயமடைந்த ஃபிரான்சிஸ் அந்தோணி, செங்கோட்டை அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி அவரது மகள் அபிதா புகாரளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
அத்துடன், மருத்துவமனையில் இருந்து ஃபிரான்சிஸ் அந்தோணியை வெளியேற்றும் நடவடிக்கையிலும் போலீஸார் ஈடுபட்டனர். அதனால் அதிருப்தி அடைந்த அபிதா, 21-ம் தேதி அங்குள்ள செல்போன் டவர் மீது ஏறி போராட்டம் நடத்தினார். அவரிடம் அதிகாரிகள் சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தியதால் டவரில் இருந்து கீழே இறங்கினார்.
தவறு செய்த போலீஸார் மீது வழக்கு பதிவு செய்யக்கோரி  அரசு மருத்துவமனையின் மீதுள்ள தண்ணீர் தொட்டியின் மீது ஏறி அபிதா போராட்டம் நடத்தினார். அவரது சகோதரி மற்றும் குடும்பத்தினர் தரையில் அமர்ந்து போராடினார்கள். பின்னர் அதிகாரிகள் மற்றும் குடும்பத்தினர் கேட்டுக் கொண்டதால் அபிதா போராட்டத்தை விலக்கிக்கொண்டார்.
இது குறித்து தென்காசி மாவட்ட எஸ்.பி-யான கிருஷ்ணராஜ் துறைரீதியான விசாரணைக்கு உத்தரவிட்டார். அத்துடன், சர்ச்சைக்குரிய செயலில் ஈடுபட்ட செங்கோட்டை சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன், தலைமைக் காவலர் மஜீத் ஆகியோர் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றப்பட்டனர்.

 

Tags :

Share via