ஆண் குழந்தை இறப்பு சாலையில் போராட்டம்

by Staff / 20-11-2022 03:33:22pm
 ஆண் குழந்தை இறப்பு சாலையில் போராட்டம்

குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில், பிறந்து ஒரு நாளே ஆன ஆண் குழந்தை இறந்ததால், 'மருத்துவர்கள் முறையாக சிகிச்சை அளிக்கவில்லை' எனக்கூறி, உறவினர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிட்லபாக்கம், ஹரிதாஸ் அம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் மாரிமுத்து, 37; கூலித் தொழிலாளி. இவரது மனைவி ஆனந்தி, 32; நிறைமாத கர்ப்பிணி.

சில நாட்களுக்கு முன், பிரசவத்திற்காக, குரோம்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டவருக்கு, 16ல் ஆண் குழந்தை பிறந்தது.குழந்தையின் எடை மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக, 'இங்குபேட்டரில்' வைத்து குழந்தைக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.குழந்தை நன்றாக இருப்பதாக மருத்துவர்கள் கூறி வந்த நிலையில், நேற்று காலை, குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

மருத்துவர்களின் அலட்சியத்தை கண்டித்து, குழந்தையின் உறவினர்கள், மருத்துவமனையை முற்றுகையிட்டு, நேற்று காலை போராட்டம் நடத்தினர்.அப்போது, மருத்துவமனை பணியாளர்களுக்கும், அவர்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பின், மருத்துவமனை எதிரே ஜி. எஸ். டி. , சாலையில் உறவினர்கள் மறியல் செய்தனர். போலீசார், பல்லாவரம் தி. மு. க. , - எம். எல். ஏ. , கருணாநிதி, அவர்களிடம் பேச்சு நடத்தினர்.தொடர்ந்து, பிரேத பரிசோதனை செய்ய முடிவு செய்து, சென்னை ராஜிவ் அரசு மருத்துவமனைக்கு குழந்தையின் உடல் எடுத்து செல்லப்பட்டது. குரோம்பேட்டை போலீசார் விசாரிக்கின்றனர்.

நன்றாக இருந்த குழந்தை இறந்துவிட்டது. பிரசவ வார்டில் உள்ள ஊழியர்கள் அலட்சியமாக பணி செய்து வருகின்றனர். குறிப்பாக, இரவு நேர ஊழியர்கள், குழந்தைகளை கவனிப்பதே கிடையாது. மொபைல் போன்களிலேயே நேரத்தை செலவிடுகின்றனர். முழுக்க முழுக்க ஊழியர்களின் அலட்சியத்தாலேயே குழந்தை இறந்துள்ளது. இதற்கு காரணமான மருத்துவர்கள், ஊழியர்கள் மற்றும் தலைமை மருத்துவர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

 

Tags :

Share via