பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய  ட்விட்டர் பக்கத்தில் ஆபாச எமோஜி

by Editor / 24-07-2021 05:09:22pm
பாகிஸ்தான் கிரிக்கெட் வாரிய  ட்விட்டர் பக்கத்தில் ஆபாச எமோஜி

 

பாகிஸ்தான் கிரிக்கெட் அணி அடுத்ததாக இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் மற்றும் டி20 போட்டி தொடர்களுக்காக தயாராகி வருகிறது. இந்த தொடர் ஜூலை 8ம் தேதி தொடங்கி ஜூலை 20ம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் தான், பாகிஸ்தான் வாரியம் தவறு ஒன்றை செய்துள்ளது.


பாகிஸ்தான் அணியை சேர்ந்த இளம் வேகப்பந்துவீச்சாளர் ஹசன் அலி, தனது 27வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். கடந்த 2016ம் ஆண்டு பாகிஸ்தான் அணிக்காக அறிமுகமாகிய இவர், இதுவரை 13 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 57 விக்கெட்டுகளையும், 54 ஒருநாள் போட்டிகளில் விளையாடி 83 விக்கெட்டுகளையும் எடுத்துள்ளார். டி20 போட்டிகளை பொறுத்தவரை 36 டி20 போட்டிகளில் விளையாடி 48 விக்கெட்டுகளையும் வீழ்த்தியுள்ளார். இவருக்கு கிரிக்கெட் உலகை சேர்ந்த பலரும் தற்போது வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.


இந்நிலையில், பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் தெரிவித்த பிறந்தநாள் வாழ்த்துதான் பிரச்னையாகியுள்ளது. தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில், ஹசன் அலி விளையாடிய போட்டிகள், விக்கெட்கள், சாதனைகள் என பட்டியலிட்டு வாழ்த்துக்கூறியிருந்தது. அதில் சர்வதேச விக்கெட்கள் எடுத்தது குறித்த விவரங்களின் முன்னால் நடுவிரல் எமோஜியை பயன்படுத்தியுள்ளது. பொதுவாக ஒருவரை ஆபாசமாக திட்டுவதற்காக இந்த நடுவிரல் எமோஜியை நெட்டிசன்கள் பயன்படுத்தி வருகின்றனர். அதனை பாகிஸ்தான் வாரியம் தவறுதலாக பயன்படுத்திவிட்டது.


தனது ட்வீட்டில் தவறான எமோஜி இருப்பதை உணர்ந்த பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம், உடனடியாக அதனை நீக்கிவிட்டு மீண்டும் புதிதாக ஒரு வாழ்த்து ட்வீட்டை போட்டது. ஆனால், நெட்டிசன்களிடம் இருந்து அந்நாட்டு வாரியம் தப்பவில்லை. அந்த ட்வீட்டை புகைப்படம் எடுத்து இணையத்தில் வைரலாக்கி வருகின்றனர். இவ்வளவு பெரிய நிர்வாகம், இந்த தவறான எமோஜியை கூட பார்க்காமல் எப்படி பதிவிட்டது என விமர்சித்து வருகின்றனர்.

 

Tags :

Share via