வாகனம் மோதி தந்தை-மகன் பலி

by Staff / 13-02-2023 01:02:05pm
வாகனம் மோதி தந்தை-மகன் பலி

சேலம் மாவட்டம் மேச்சேரி அருகே உள்ள கொங்குபட்டி கொத்தபள்ளியானூரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 38). விவசாய கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி ஜெயலட்சுமி. இந்த தம்பதிக்கு சந்தோஷ், பழனியப்பன் என்ற மகன்களும், சந்தியா என்ற மகளும் இருந்தனர். சந்தியா திருமணமாகி தர்மபுரி மாவட்டம் பென்னாகரத்தில் வசித்து வருகிறார்.இந்தநிலையில் சந்தியா, தனது கணவர் அஜித்குமாருடன் (25) கொத்தபள்ளியானூருக்கு வந்தார். நேற்று ஞாயிற்றுக்கிழமை என்பதால் இறைச்சி வாங்குவதற்காக செல்வராஜ் தனது மகன் பழனியப்பன் (12), மருமகன் அஜித்குமார் ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் மேச்சேரிக்கு சென்றார்.

அங்கு ஆட்டு இறைச்சி வாங்கி கொண்டு அவர்கள் 3 பேரும் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை செல்வராஜ் ஓட்டினார். காலை 9 மணிக்கு மேச்சேரி-தொப்பூர் சாலையில் காளிகவுண்டனூர் பகுதியில் அந்த வழியாக வந்த அடையாளம் தெரியாத வாகனம் மோட்டார் சைக்கிள் மீது மோதிவிட்டு நிற்காமல் சென்றது. இந்த விபத்தில் செல்வராஜ், பழனியப்பன், அஜித்குமார் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். சிறிது நேரத்தில் செல்வராஜ், தனது மகன், மருமகன் கண் முன்னே ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். அந்த வழியாக சென்றவர்கள் பழனியப்பன், அஜித்குமாரை மீட்டு சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் செல்லும் வழியிலேயே பழனியப்பன் பரிதாபமாக இறந்தான். அஜித்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. விபத்து குறித்து தகவல் அறிந்த மேச்சேரி போலீசார் சம்பவம் நடந்த இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் செல்வராஜ் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்தநிலையில் செல்வராஜின் உறவினர்கள் அரசு ஆஸ்பத்திரியில் திரண்டனர்.

அவர்கள், மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனத்தை கண்டு பிடிக்கக்கோரியும், அதை ஓட்டி வந்தவரை கைது செய்யக்கோரியும் ஆஸ்பத்திரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் போலீசார் உரிய நடவடிக்கை எடுக்கும் வரை 2 பேரின் உடல்களையும் வாங்க மாட்டோம் என்று கூறினர். இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.இதுகுறித்து அறிந்த மேச்சேரி போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். மேலும் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதில் செல்வராஜின் உறவினர்கள் சமாதானம் அடைந்தனர். இதையடுத்து 2 பேரின் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.இந்த விபத்து குறித்து மேச்சேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் மோட்டார் சைக்கிள் மீது மோதிய வாகனம் குறித்து கண்காணிப்பு கேமராக்களின் பதிவின் மூலமும் தீவிரமாக விசாரித்து வருகிறார்கள். வாகனம் மோதி தந்தை-மகன் உயிரிழந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

 

Tags :

Share via