லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் நடத்திய சோதனை நிறைவு

by Staff / 18-02-2023 02:17:09pm
லஞ்ச ஒழிப்பு போலீசார் 10 மணி நேரம் நடத்திய சோதனை நிறைவு

பூந்தமல்லி ஊராட்சி ஒன்றியத்தில் 28 கிராம ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் நடைபெற்று வரும் சாலை, குடிநீர், உள்ளிட்ட அடிப்படை வசதிப் பணிகள் மற்றும் அரசின் வளர்ச்சி திட்டப்பணிகளை நிர்வகிக்கவும், கண்காணிக்கவும் வட்டார வளர்ச்சி அலுவலகம் பூந்தமல்லியில் செயல்பட்டு வருகிறது. இந்த ஊராட்சிகளில் உள்ள காலி மனை, வீட்டுமனை, வீடு கட்ட அனுமதி, வரைபட அனுமதி உள்பட பல்வேறு பணிகளுக்கு வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உள்ள அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அதிக அளவில் லஞ்சம் கேட்பதாக பொதுமக்கள் புகார் கூறி வந்தனர். மேலும் பணம் கொடுக்கவில்லை என்றால் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் எந்த வேலையும் நடப்பதில்லை என்றும், இதனால் கிராமப்புற பகுதிகளை சேர்ந்த ஏழை எளிய மக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டியிருந்தனர்.இந்த நிலையில் இன்று மதியம் ஆலந்தூர் லஞ்ச ஒழிப்பு அலுவலகத்திலிருந்து டி. எஸ். பி. லவக்குமார் தலைமையில் 10க்கும் மேற்பட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர் பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்துக்கு அதிரடியாக வந்து சோதனையில் ஈடுபட்டனர். இதையடுத்து வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் முன்பக்க கதவை பூட்டி விட்டு வட்டார வளர்ச்சி அலுவலர் அறை, பொறியாளர் அறை, மேலாளர் அறை, உள்பட அனைத்து அறைகளிலும் லஞ்ச ஒழிப்புத் துறையினர் தீவிர சோதனையிட்டனர். மேலும் அந்த அலுவலகத்துக்கு வந்தவர்களை சோதனை செய்ததில் ஒருவரிடமிருந்து ரூ. 1 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர் யாருக்கு லஞ்சமாக கொடுக்க எடுத்து வந்தார் என்பது குறித்தும் விசாரித்தனர். மேலும் சோதனையின் போது அலுவலகத்தில் உள்ளவர்கள் வெளியே செல்லவும், வெளியிலிருந்து யாரும் உள்ளே செல்லவும் அனுமதிக்கவில்லை தொடர்ந்து நடந்த சோதனையில் அங்கு பணிபுரியும் ஊழியர் ஒருவரிடமிருந்து கணக்கில் வராத ரூ. 60 ஆயிரம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலகத்தின் மீது பொதுமக்களிடமிருந்து தொடர்ந்து 8 மாதங்களாக வந்த புகார்களையடுத்து இந்த சோதனை நடைபெற்றதாக லஞ்ச ஒழிப்பு துறையினர் தெரிவித்தனர். மேலும் 10 மணி நேரத்திற்க்கும் மேலாக இந்த சோதனையின் போது வட்டார வளர்ச்சி அலுவலரிடம் லஞ்ச ஒழிப்புத்துறை அதிகாரிகள் துருவி, துருவி விசாரணை செய்து முக்கிய ஆவணங்களை கைப்பற்றி சென்றது குறிப்பிடத்தக்கது.

 

Tags :

Share via