குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க கூட்டு பேரூந்து சேவை துவக்கம் 

by Editor / 03-03-2023 08:04:58am
குமரி மாவட்ட சுற்றுலா தலங்களை சுற்றிப்பார்க்க கூட்டு பேரூந்து சேவை துவக்கம் 

குமரி மாவட்டத்தில் சுற்றுலா தலங்களை இணைத்து அரசு பஸ் போக்குவரத்து நடைபெற உள்ளது. குறைந்தபட்சம் 50 பேர் முன்பதிவு செய்தால் அந்தந்த ஊரில் இருந்து இயக்கப்படும் என போக்குவரத்துறை அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசு பஸ் போக்குவரத்துக்கழக நாகர்கோவில் மண்டல அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: -

பொதுமக்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில் பல்வேறு பகுதிகளுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும் ஆன்மிக சுற்றுலா, சுற்றுலா தலங்களை இணைத்து பஸ் போக்குவரத்து நடைபெற உள்ளது. அதன்படி குமரி மாவட்டத்தில் அமைந்துள்ள சுற்றுலா தலங்களான கன்னியாகுமரி, சுசீந்திரம், பத்மநாபபுரம் அரண்மனை, மாத்தூர் தொட்டி பாலம், திற்பரப்பு அருவி, பேச்சிப்பாறை போன்ற முக்கிய சுற்றுலா இடங்களுக்கு பொதுமக்களின் வேண்டுகோளின்படி பஸ்கள் இயக்கபட உள்ளது.
இதற்காக மொத்தம் 50 பயணிகள் முன்பதிவு செய்யும் பட்சத்தில் அவர்களின் ஊரில் இருந்தே பஸ்கள் இயக்கப்படும். முன்பதிவு செய்ய தொடர்பு கொள்ள வேண்டிய செல்போன் எண்கள் கிளை மேலாளா் (நாகர்கோவில்) - 9487599085, கிளை மேலாளர் (வணிகம்) - 9487599082, கிளை மேலாளர் (கன்னியாகுமரி) - 9487599087 ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

 

Tags :

Share via