ஏப். 8-ல் பிரதமர் மோடி சென்னை வருகிறார்

by Staff / 03-04-2023 03:33:17pm
ஏப். 8-ல் பிரதமர் மோடி சென்னை வருகிறார்


சென்னை விமான நிலையத்தில் ரூ. 2, 467 கோடி மதிப்பில், 2. 36 லட்சம் சதுரமீட்டரில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த விமான முனையங்களின் முதல்கட்டப் பணிகள் முடிவடைந்துள்ளன.மொத்தம் 5 தளங்களில் அமைந்துள்ள இந்த புதிய முனையம் பயன்பாட்டுக்கு வந்த பின்னர், பயணிகளின் எண்ணிக்கை 2. 2 கோடியில் இருந்து, சுமார் 3 கோடியாக அதிகரிக்கும்.இந்த புதிய முனைய கட்டிடத்தில் தமிழக கலாச்சாரம் மற்றும் பெருமைகளைப் பிரதிபலிக்கும் வகையில் வண்ணமயமான கோலங்கள், படங்கள், ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.80 சோதனை கவுன்ட்டர்கள், 8 சுயசோதனை கவுன்ட்டர்கள், 6 லக்கேஜ் கவுன்ட்டர்கள் மற்றும் 108 குடியுரிமை அதிகாரிகள் சோதனை செய்யும் கவுன்ட்டர்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பயணிகள் சோதனைகளை எளிதில் முடித்துக்கொண்டு செல்ல முடியும்.புதிய முனையத்தின் கீழ்தளத்தில், விமான பயணிகளின் உடைமைகள் கையாளப்படும்.மேலும், மல்டி லெவல் கார் பார்க்கிங், ஷாப்பிங் மால், திரையரங்குகள் அமைக்கப்பட்டு, அவை கடந்த பிப். 4-ம் தேதி பயன்பாட்டுக்கு வந்துவிட்டது.புதிய முனையத்தை பிரதமர் நரேந்திர மோடி வரும் 8-ம் தேதி பிற்பகலில் திறந்து வைக்கவுள்ளார். இதுதவிர, சென்னை சென்ட்ரல்-கோயம்புத்தூர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையையும் பிரதமர் தொடங்கிவைக்கிறார்.மொத்தம் 8 பெட்டிகளுடன் வடிவமைக்கப்பட்டுள்ள வந்தே பாரத் ரயில், சென்னையிலிருந்து 6 மணி நேரத்தில் கோவையைச் சென்றடையும். புதன்கிழமை தவிர, வாரத்தில் 6 நாட்கள் வந்தே பாரத் ரயில் இயக்கப்படும்.இரு மார்க்கத்தில் இயக்கப்படும் இந்த ரயில், ஜோலார்பேட்டை, திருப்பூர், ஈரோடு, சேலம் ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும். இதுதவிர, தாம்பரம்-செங்கோட்டை இடையே வாரம் 3 முறை விரைவு ரயில் சேவையைத் தொடங்கிவைத்து, ரூ. 294 கோடியில் திருத்துறைப்பூண்டி-அகஸ்தியம்பள்ளி இடையே 37 கி. மீ. தொலைவுக்கு முடிக்கப்பட்டுள்ள அகலப் பாதையை பிரதமர் நாட்டுக்கு அர்ப்பணித்து வைக்கிறார்.இந்த விழாவுக்காக பல்லாவரம் அருகேயுள்ள ராணுவ மைதானத்தில் பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டு வருகிறது. அதேபோல, ஏப். 8-ம் தேதி மாலை மயிலாப்பூர் ஸ்ரீராமகிருஷ்ணா மடத்தில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளார். அன்று இரவு ராஜ்பவனில் தங்கும் பிரதமர், ஆளுநர் ஆர். என். ரவி மற்றும் பாஜக நிர்வாகிகளை சந்தித்துப் பேச உள்ளதாகக் கூறப்படுகிறது‌.

 

Tags :

Share via