பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைக்கக்கூடாது

by Staff / 17-04-2023 02:45:20pm
பள்ளிக் கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைக்கக்கூடாது

தமிழகத்தில் உள்ள அரசுப் பள்ளியில் 2023-202ம் கல்வியாண்டில் 1முதல் 9 ஆம் வகுப்பு வரையிலான மாணவர் சேர்க்கை இன்று தொடங்கியது. சென்னை கொளத்தூரில் உள்ள அரசு மாதிரி மேல்நிலைப் பள்ளியில் மாணவர் சேர்க்கையை அமைச்சர்கள் அன்பில் மகேஸ் பொய்யாமொழி மற்றும் சேகர்பாபு ஆகியோர் தொடங்கி வைத்தனர்.இதனைத் தொடர்ந்து அமைச்சர் அன்பில் மகேஸ் அளித்த பேட்டியில், "அரசுப் பள்ளிகளில் பல சலுகைகளை நாங்கள் கொடுக்கிறோம். இன்று அரசுப் பள்ளிகளை நோக்கி மாணவர்கள் அதிகம் வருகிறார்கள். கடந்த 2 ஆண்டுகளாக அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை 11 லட்சமாக உயர்ந்துள்ளது. முதல்வர் அறிவுரையின்படி அரசுப் பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையை அதிகரிக்க இன்று இந்த நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. அரசுப் பள்ளிகளை மேம்படுத்த முதல்வர் கண்ணும் கருத்துமாக இருந்து வருகிறார். பெற்றோர்கள் அரசுப் பள்ளிகளில் தங்களது பிள்ளைகளை சேர்க்க வேண்டும். அரசுப் பள்ளியில் உள்ள ஆசிரியர் பற்றாக்குறை, ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நிரப்பப்பட உள்ளது.

கோடை விடுமுறை காலத்தில் தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்கள் அவர்களது குழந்தைகளுக்கு பாடம் எடுக்க வேண்டும் என விரும்புகிறார்கள். இருந்தாலும் மாவட்ட அளவில் இதனைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்கப்படும்.தனியார் பள்ளிகளில் கட்டணம் வசூலிப்பது தொடர்பாக தனியார் பள்ளிகளுக்கு வேண்டுகோள் வைத்துள்ளோம். கட்டணம் செலுத்தாத மாணவர்களை வெளியில் நிற்க வைப்பது போன்ற செயல்களில் ஈடுபடக் கூடாது என்று சொல்லி இருக்கிறோம். ஒவ்வொரு தனியார் பள்ளியும் கட்டமைப்புகளை பொறுத்து கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை கண்காணிக்க கட்டணம் ஆய்வுக்குழு இருக்கிறது. " இவ்வாறு அவர் கூறினார்.

 

Tags :

Share via