பள்ளம் தோண்டி பதுக்கி வைக்கப்பட்ட 1, 000 லிட்டர் சாராயம் பறிமுதல்

by Staff / 18-05-2023 03:11:09pm
பள்ளம் தோண்டி பதுக்கி வைக்கப்பட்ட 1, 000 லிட்டர் சாராயம் பறிமுதல்

விழுப்புரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் சாராயம் குடித்த பெண் உள்பட 15-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இதையடுத்து தமிழகம் முழுவதும் சாராயம் காய்ச்சுவோர், விற்பனையில் ஈடுபடுவோரை கைது செய்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க டி. ஜி. பி. சைலேந்திரபாபு போலீஸ் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அதன்பேரில் சேலம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக சாராய வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நேற்று முன்தினம் தலைவாசல் அருகே உள்ள மணிவிழுந்தான் ஊராட்சி வசந்தபுரம் பகுதியில் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் ஆத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு நாகராஜன் மற்றும் தனிப்படை போலீசார் அந்த பகுதிக்கு சென்று தீவிர சோதனை நடத்தினர். அப்போது அங்குள்ள குடிநீர் கிணற்றின் அருகே 3 அடி ஆழத்துக்கு பள்ளம் தோண்டி, அதில் லாரி டியூப்புகளில் அடைத்து சாராயத்தை புதைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இவ்வாறு 1, 000 லிட்டர் சாராயம் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது ராமசேசுபுரத்தை சேர்ந்த மனோகரன், சந்திரா, மணிகண்டன், தனலட்சுமி, சுதன், சூர்யா ஆகியோர் சாராயத்தை பதுக்கி வைத்திருந்தது தெரிந்தது. இதையடுத்து 1, 000 லிட்டர் சாராயத்தை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அதனை பதுக்கி வைத்த 2 பெண்கள் உள்பட 6 பேர் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவர்களை தேடி வருகின்றனர்.

 

Tags :

Share via