காதலனை கொலை செய்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு

by Staff / 03-06-2023 01:33:49pm
காதலனை கொலை செய்த வழக்கில் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் மறுப்பு

குமரி மாவட்டம் களியக்காவிளை அருகே உள்ள ராமவர்மன்சிறை பகுதியை சேர்ந்தவர் கிரீஷ்மா (வயது 22). இவர் குமரி மாவட்டத்தில் உள்ள தனியார் கல்லூரியில் படித்த கேரள மாநிலம் பாறசாலையை சேர்ந்த ஷாரோன் என்பவரை காதலித்துள்ளார். ஷாரோன் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் திடீர் உடல்நலக்குறைவால் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி, திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், அதே மாதம் 25-ந்தேதி ஷாரோன் பரிதாபமாக இறந்தார்.தனது மகன் சாவுக்கு, கிரீஷ்மா தான் காரணம் என, ஷாரோனின் தந்தை கொடுத்த புகாரின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். கேரள மாநில குற்றப்பிரிவு போலீசார் நடத்திய விசாரணையில், காதலன் ஷாரோனுக்கு, காதலி கிரீஷ்மா, குளிர்பானத்தில் விஷம் கலந்து கொடுத்திருப்பது தெரிய வந்தது. இது தொடர்பாக கிரீஷ்மா கைது செய்யப்பட்டார். மேலும் இந்த சம்பவத்திற்கு உதவியாக செயல்பட்டதாக, கிரீஷ்மாவின் தாய் சிந்து, தாய்மாமா நிர்மல் குமார் ஆகியோரும் கைது செய்யப்பட்டனர்.
இது தொடர்பான வழக்கு நெய்யாற்றின்கரை கூடுதல் செசன்சு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது.இதனை தொடர்ந்து தங்களுக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கைது செய்யப்பட்ட 3 பேரும் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். இதனை விசாரித்த கோர்ட்டு, சிந்து மற்றும் நிர்மல்குமாருக்கு ஜாமீன் வழங்கியது. ஆனால் கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கவில்லை. இதனால், அவர் கடந்த 7 மாதங்களாக திருவனந்தபுரம் அட்ட குளங்கரை பெண்கள் சிறையிலேயே உள்ளார். இந்த நிலையில், ஜாமீன் கேட்டு நெய்யாற்றின்கரை கோர்ட்டில் கிரீஷ்மா மீண்டும் மனு தாக்கல் செய்தார். இந்த மனு நீதிபதி வித்யாதரன் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது போலீசார், கிரீஷ்மாவுக்கு ஜாமீன் வழங்கினால், சாட்சியங்களை கலைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதி, கிரீஷ்மாவின் ஜாமீன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

 

Tags :

Share via