நீட் தேர்வு பயிற்சி அளித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

by Staff / 03-09-2023 04:43:21pm
நீட் தேர்வு பயிற்சி அளித்திடுக: ராமதாஸ் வலியுறுத்தல்

நீட் விலக்கு பெறும் வரை, அரசு பள்ளி மாணவர்களுக்கு நீண்ட காலம் பயிற்சி அளிக்க வேண்டியதன் தேவையை தமிழக அரசு இப்போதாவது உணர்ந்து கொள்ள வேண்டும். 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு மட்டும் நவம்பர் மாதத்தில் தொடங்கி பிப்ரவரி மாதம் வரை வாரத்தில் ஒரு நாள் பெயரளவில் பயிற்சி அளிக்கும் முறையை கைவிட்டு, அனைத்து மாணவர்களுக்கும் குறைந்தது இரு ஆண்டுகள் பயிற்சி அளிக்கப்படுவதை பள்ளிக்கல்வித் துறை உறுதி செய்ய வேண்டும்" என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மருத்துவப் படிப்பில் சேருவதற்கான நீட் தேர்வை எழுத விரும்பும் தமிழக அரசு பள்ளி மாணவர்களுக்கு பயிற்சியை தொடங்குவது குறித்து இதுவரை எந்த அறிவிப்பும் வெளியாகாதது ஏமாற்றமளிக்கிறது. கடந்த ஆண்டுகளில் மிகவும் தாமதமாக தொடங்கப்பட்ட நீட் பயிற்சியால் எந்த பயனும் விளையாத நிலையில், நடப்பாண்டிலாவது பயிற்சியை முன்கூட்டியே தொடங்குவது தான் சரியான செயலாக இருக்கும். சமூகநீதிக்கு எதிரான நீட் நுழைவுத்தேர்வு ரத்து செய்யப்பட வேண்டும்; 12 ஆம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையில் தான் மருத்துவப் படிப்புக்கான மாணவர் சேர்க்கையை நடத்த வேண்டும் என்பது தான் பாமகவின் நிலைப்பாடு.

 

Tags :

Share via