இருகோடுகள் புகழ் நடிகை ஜெயந்தி -சில நினைவுகள் 

by Editor / 28-07-2021 04:21:47pm
இருகோடுகள் புகழ் நடிகை ஜெயந்தி -சில நினைவுகள் 

 

தமிழ் சினிமாவில் மறக்க முடியாத நடிகைகளில் ஜெயந்தியும் ஒருவர். கதாநாயகி, குணசித்திர வேடம், நகைச்சுவை என பன்முகத் திறமை வாய்ந்த நடிகையாக 1960 70களில் தமிழ் திரை ரசிகர்களால் பெரிதும் விரும்பப்பட்ட நடிகையாக வலம் வந்தவர்.


கர்நாடக மாநிலம், பெல்லாரியில் 1945ம் ஆண்டு ஜனவரி 6ந் தேதி பாலசுப்ரமணியம் - சந்தான லக்ஷ்மி தம்பதிக்கு மகளாக பிறந்தார். ஆரம்ப காலங்களில் சிறு சிறு துணை கதாபாத்திரம் ஏற்று நடித்து வந்த இவருக்கு கே.பாலசந்தரின் 'பாமா விஜயம்' திரைப்படத்தில் 3 கதாநாயகிகளில் ஒருவராக நாகேஷிற்கு ஜோடியாக நடிக்கும் வாய்ப்பு கிடைக்க பெற்றார். அதன்பின் தொடர்ந்து கே.பாலசந்தரின் படங்களில் முக்கிய கதாபாத்திரம் ஏற்று நடித்து புகழடைந்தார்.

இவர் இயக்கத்தில் ஜெயந்தி நடித்த அத்தனை படங்களும் வெற்றிப் படங்களாக அமைந்தது என்றால் அது மிகையல்ல. 'எதிர் நீச்சல்" 'இரு கோடுகள்' 'புன்னகை' 'கண்ணா நலமா' வெள்ளி விழா என்று இவருடைய வெற்றிப் பயணம் தமிழ் திரையுலகில் தொடர்ந்தது.

இதே காலகட்டத்தில் கன்னடத்தில் நம்பர் ஒன் கதாநாயகியாக ராஜ்குமார், உதயகுமார், கல்யாண் குமார் போன்ற முன்னணி கதாநாயகர்களுடனும் நடித்து அங்கே தனக்கென ஒரு தனி சாம்ராஜ்யத்தையே ஏற்படுத்தி இருந்தார்.

இவர் ராஜ்குமாருடன் ஜோடியாக 30 கன்னட படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர் என்பது குறிப்பிடத்தக்கது.தமிழ், கன்னடம், தெலுங்கு, மலையாளம், ஹிந்தி மற்றும் மராத்தி மொழிகளில் ஏறக்குறைய 500 படங்களுக்கு மேல் நடித்த பெருமை கொண்டவர். அபிநய சாரதே என திரையுலகில் அழைக்கப்படும் இவர் 7 முறை கர்நாடக மாநில அரசின் விருதை பெற்றுள்ளார்.

இதுதவிர நிறைய தனியார் அமைப்புகளின் விருதுகளையும் பெற்றுள்ளார். நடிகையாக மட்டுமல்லாது சில படங்களை தயாரிக்கவும் செய்துள்ளார். நடிகரும், இயக்குனருமான பெகடி சிவராமனை திருமணம் செய்த இவருக்கு கிருஷ்ண குமார் என்ற மகன் உள்ளார்.கடந்த 35 ஆண்டுகளாக கடுமையான ஆஸ்துமா நோயினால் பாதிக்கப்பட்டு தினமும் ‘இன்ஹேலர்’ பயன்படுத்தி வந்தவர்.சினிமாவை விட்டு விலகி பெங்களூரில் தனது மகன் வீட்டில் வசித்து வந்தவர் ஜெயந்தி. இந்நிலையில் உடல்நலக்குறைவால் அவர் இன்று (திங்கள்) காலை மரணமடைந்தார். 

 

Tags :

Share via