போக்குவரத்துக் கழக கட்டங்களில் சூரிய மின் தகடுகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...

by Admin / 27-07-2021 02:26:42pm
போக்குவரத்துக் கழக கட்டங்களில் சூரிய மின் தகடுகள்... முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்...



அரசு பேருந்துகளின் பராமரிப்பை மேம்படுத்தவும், வழித்தடங்களை மறுஆய்வு செய்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பேருந்து சேவைகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

 சென்னை தலைமைச் செயலகத்தில் போக்குவரத்துத்துறை மூலம் மேற்கொள்ளப்படும் பல்வேறு திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. இதில், போக்குவரத்துறையின் செயல்பாடுகள், சேவைகள் மற்றும் பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. மேலும், புதிய பேருந்துகளை ஒதுக்கீடு செய்வது, கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது, போக்குவரத்துக் கழகங்களின் நிதிநிலை செயல்பாட்டுத் திறன் உள்ளிட்டவை குறித்தும் முதலமைச்சர் ஆய்வு செய்தார்.
 
இதனைத்தொடர்ந்து எண்ணெய் நிறுவனங்கள் மூலமாக போக்குவரத்துக் கழகங்களுக்கு சொந்தமான இடங்களில் பெட்ரோல், டீசல் சில்லரை விற்பனை மையங்கள் அமைப்பது, அனைத்து அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டடங்களின் மேற்கூரைகளிலும் சூரியமின் தகடுகளை அமைத்து, மின்சாரம் உற்பத்தி செய்வது குறித்து நடவடிக்கை எடுக்குமாறு அதிகாரிகளுக்கு முதலமைச்சர் அறிவுறுத்தியுள்ளார். இந்த ஆய்வுக் கூட்டத்தில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ராஜகண்ணப்பன், தலைமைச் செயலாளர் இறையன்பு உள்ளிட்ட உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்.

 

Tags :

Share via