போலி விமான டிக்கெட்: டிராவல்ஸ் உரிமையாளர் கைது..

by Staff / 24-12-2023 02:26:14pm
போலி விமான டிக்கெட்: டிராவல்ஸ் உரிமையாளர் கைது..

அமெரிக்கா செல்ல போலி விமான டிக்கெட் கொடுத்து பண மோசடியில் ஈடுபட்டதாக டிராவல்ஸ் நிறுவன உரிமையாளரை சைபர் க்ரைம் போலீஸார் கைது செய்துள்ளனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை, ராயப்பேட்டை நெடுஞ்சாலையைச் சேர்ந்தவர் கிருஷ்ணவேணி (58). இவர் 8 ஆண்டுகளுக்கு முன்பு அமெரிக்கா செல்ல, சென்னை அண்ணா சாலையில் டிராவல்ஸ் நிறுவனம் நடத்தி வந்த திருவள்ளூர் மாவட்டம், தண்டலம் பகுதியில் வசித்த திண்டுக்கல்லைச் சேர்ந்த ஜெகநாதன் (69) என்பவரை அணுகினார். அவர் அமெரிக்கா செல்ல விமான டிக்கெட் பெற்றுக் கொடுத்தார். தற்போது மீண்டும் அமெரிக்கா செல்வதற்காக கடந்த ஜூலையில் அதே ஜெகநாதனை கிருஷ்ணவேணி அணுகினார். இதையடுத்து டிக்கெட் செலவாக ஜெகநாதன் அவரிடமிருந்து ரூ. 1 லட்சத்து 29 ஆயிரத்து 875 பெற்றுக் கொண்டார். தொடர்ந்து அமெரிக்கா செல்வதற்கான விமான டிக்கெட்டையும் ஜெகநாதன் அண்மையில் அனுப்பி வைத்தார். கிருஷ்ணவேணி அதைப் பார்த்தபோது அது போலி டிக்கெட் எனத் தெரியவந்தது. அதிர்ச்சி அடைந்த அவர் இது குறித்து சென்னை கிழக்கு மண்டல சைபர் க்ரைம் பிரிவில் புகார் தெரிவித்தார். அதன்படி, அப்பிரிவு காவல் ஆய்வாளர் பத்மகுமாரி தலைமையிலான தனிப்படைபோலீஸார் விசாரணை நடத்தினர். போலி விமான டிக்கெட் கொடுத்து பணமோசடி நடைபெற்றது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட ஜெகநாதன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார்.

 

Tags :

Share via