சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி உத்திர ஆராட்டு வைபவத்திற்காக கொடி ஏற்றப்பட்டது.

by Editor / 16-03-2024 10:14:16am
சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி உத்திர ஆராட்டு வைபவத்திற்காக கொடி ஏற்றப்பட்டது.

உலகப் புகழ் பெற்ற சபரிமலை ஐயப்பன் கோவில், ஆண்டு தோறும் மண்டல பூஜை, மகர விளக்குப் பூஜை மற்றும் நிறை புத்தரிசி பூஜை, வருடப் பிறப்பு போன்றவற்றிற்குத் திறக்கப்படுவது வழக்கம். மேலும், ஒவ்வொரு மாதப் பிறப்பின் போதும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு 5 நாட்கள் வழக்கமான பூஜைகள் நடைபெறும்.


அந்த வகையில்,பங்குனி மாத பூஜை மற்றும் பங்குனி  உத்திர ஆராட்டு திருவிழாவுக்காக சபரிமலை நடை 13 ஆம் தேதி மாலை  5:00 மணிக்கு மேல் திறக்கப்பட்டது. நடை திறந்ததும் மேல்சாந்தி மகேஷ் நம்பூதிரி  தீபம் ஏற்றினார்.இதனைத்தொடர்ந்து பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள். 14 ஆம் தேதி முதல் பங்குனி மாத பூஜைகள் தொடங்கியது.

பங்குனி உத்திர திருவிழா மார்ச் 16ஆம் தேதி இன்று காலை 9.45 மணிக்கு கொடியை தந்திரி கண்டரரு மகேஷ் மோகனரு ஏற்றி வைத்து 10 நாள் திருவிழாவை தொடங்கி வைத்தார். விழாவையொட்டி வழக்கமான பூஜைகளுடன் சிறப்பு பூஜையாக உத்சவ பலி நடைபெறும். 

25ஆம் தேதி 10ஆம் நாள் திருவிழாவன்று பம்பையில் ஐயப்பனுக்கு ஆராட்டு நடைபெறுகிறது. அன்று மாலையில் கொடி இறக்கப்பட்டு 10 நாள் திருவிழா நிறைவுபெறும். பங்குனி உத்திர திருவிழாவுக்கான ஏற்பாடுகளை திருவிதாங்கூர் தேவஸ்தானம் செய்து வருகிறது.

 பங்குனி மாதத்தில் சபரிமலை ஐயப்பனுக்கு பம்பா நதிக்கரையில் நடைபெறும் பங்குனி உத்திர ஆராட்டு திருவிழாவில் பாரபட்சமில்லாமல், அனைத்து வயதுடைய பெண்களும் கலந்துகொண்டு சபரிமலை ஐயப்பனை கண் குளிர தரிசிக்கலாம். ஐயப்பனை பெண்களும் தரிசிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஆராட்டு திருவிழா நடத்தப்படுவதாக கூறப்படுகிறது. இதனால் தான், மற்ற விழாக்களை விட பங்குனி உத்திர ஆராட்டு திருவிழா மிகவும் சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது.
 

 

Tags : சபரிமலை சன்னிதானத்தில் பங்குனி உத்திர ஆராட்டு வைபவத்திற்காக கொடி ஏற்றப்பட்டது.

Share via