இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு  வெண்கல பதக்கம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

by Editor / 05-08-2021 04:12:52pm
 இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு  வெண்கல பதக்கம்: ஜனாதிபதி, பிரதமர் வாழ்த்து

 


ஒலிம்பிக் ஆண்கள் ஹாக்கி போட்டியில் 3-வது இடத்துக்கான ஆட்டத்தில் ஜெர்மனி அணியை 4 -5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை கைப்பற்றியது. 32-வது ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நடைபெற்று வருகின்றன. 49 ஆண்டுகளுக்குப் பின் இந்த முறை அரையிறுதிக்குத் தகுதி பெற்ற இந்திய ஆண்கள் அணி பெல்ஜியம் அணியுடன் மோதியது. இதில் 5 2 என்ற கோல் கணக்கில் இந்தியா தோல்வி அடைந்து இறுதி போட்டிக்கு செல்லும் வாய்ப்பை இழந்தது.


இதைத் தொடர்ந்து வெண்கலப் பதக்கத்துக்கான ஆண்கள் ஹாக்கி போட்டியில் இந்திய ஜெர்மனி அணிகள் மோதின. ஆட்டம் தொடங்கியதிலிருந்தே இரு அணியினரும் பரபரப்பாகச் செயல்பட்டனர். ஆட்டத்தின் 2-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் திமுர் குருஸ் முதல் கோல் அடித்து இந்திய அணிக்கு அதிர்ச்சி அளித்தார். ஆட்டத்தின் 4-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கான்ஸ்டான்டன் ஸ்டாயிப்புக்கு க்ரீன் கார்டு அளித்தார் நடுவர். இதனால், 10 வீரர்களுடன் ஜெர்மனி ஆடியது. 2-வது கால்பகுதி ஆட்டம் தொடங்கியதும், 17-வது நிமிடத்தில் இந்திய அணி வீரர் நிலாகந்தா சர்மா அளித்த பாஸை அருமையான கோலாக சிம்ரன்ஜித் சிங் மாற்றினார். ஆட்டத்தின் 24-வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் கிறிஸ்டோபர் பந்தை சகவீரர் நிக்லாஸ் வெலனுக்கு பாஸ் செய்யவே அருமையான கோலாக்கினார். 25-வது நிமிடத்தில் இந்திய வீரர் சுரேந்திர குமார் செய்த தவறால், பந்தை ஜெர்மனி வீரர் பெனடிக் பர்க் பறித்துச் சென்று கோலாக்கினார்.


27-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்திக் சிங் கிடைத்த வாய்ப்பில் கோல் அடித்தார். 29-வது நிமிடத்தில் இந்திய வீரர் ஹர்மன்பிரீத் சிங் கோல் அடிக்க இந்திய அணி 3- 3 என்ற கணக்கில் சமன் செய்தது. ஒலிம்பிக்கில் ஹர்மன்பிரீத் சிங் தனது 6-வது கோலை அடித்தார்.


இதனால் ஆட்டத்தின் 2-வது கால்பகுதியில் இந்திய அணியும், ஜெர்மனியும் தலா 3 கோல்களுடன் சமநிலை பெற்றனர். ஆட்டமும் பரபரப்பை நோக்கி நகர்ந்தது. 3-வது கால்பகுதி நேரத்தில் 31-வது நிமிடத்தில் இந்திய அணிக்கு கிடைத்த பெனால்டி ஸ்ட்ரோக்கை இந்திய வீரர் ரூபேந்திர பால்சிங் கோலக்கினார். 34-வது நிமிடத்தில் அடுத்த அடியை ஜெர்மனி தலையில் இந்திய அணியினர் இறக்கினர். குர்ரன்த் சிங்கிடம் கிடைத்த பாஸை லாகமாகக் கடத்திச் சென்று சிம்ரன்ஜித் சிங் கோலாக்கினார். 49வது நிமிடத்தில் ஜெர்மனி வீரர் லூகாஸ் கோல் அடிக்க 5 4 என்ற கணக்கில் இந்தியா முன்னிலையில் இருந்தது. ஆட்டநேர முடிவில் ஜெர்மனியை 4- 5 என்ற கோல்கணக்கில் வீழ்த்தி இந்திய அணி வெண்கலப் பதக்கத்தை வென்றது.
 


வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்துகள் குவிகின்றன. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
பிரதமர் மோடி வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில்,


வரலாற்று! ஒவ்வொரு இந்தியரின் நினைவிலும் பொறிக்கப்படும் நாள். வெண்கலத்தை வீட்டிற்கு கொண்டு வந்த எங்கள் ஆண்கள் ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்த சாதனையின் மூலம், ஒட்டுமொத்த நாட்டின் குறிப்பாக நமது இளைஞர்களின் கற்பனையை அவர்கள் நிறைவேற்றி உள்ளனர். எங்கள் ஆக்கி அணியை நினைத்து இந்தியா பெருமிதம் கொள்கிறது என கூறியுள்ளார்.
ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில், ஒலிம்பிக் போட்டியில் வெண்கலம் வென்று வரலாறு படைத்த இந்திய ஆக்கி அணிக்கு வாழ்த்துக்கள். இந்திய ஆடவர் ஆக்கி அணி பெற்ற வெற்றி ஆக்கியில் புதிய சகாப்தத்தை உருவாக்கி உள்ளது. விளையாட்டில் சாதிக்க துடிக்கும் இளைஞர்களுக்கு இந்திய அணியின் வெற்றி உந்து சக்தியாக இருக்கும் என்றார். இதே போல் ராகுல்காந்தி உள்ளிட்ட தலைவர்களும் இந்திய ஆண்கள் ஹாக்கி அணிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

 

Tags :

Share via