வேகமெடுக்கிறது பொள்ளாச்சி வழக்கு... 6 மாதத்தில் முடிக்க உத்தரவு...

by Admin / 11-08-2021 01:56:35pm
வேகமெடுக்கிறது பொள்ளாச்சி வழக்கு... 6 மாதத்தில் முடிக்க உத்தரவு...

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு விசாரணையை, 6 மாதத்தில் முடிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 கடந்த 2019ஆம் ஆண்டு பொள்ளாச்சியில், நூற்றுக்கணக்கான இளம்பெண்களை பாலியல் வன்கொடுமை செய்து, அதனை வீடியோ எடுத்த கும்பல், அந்த பெண்களை மிரட்டி பணம் பறித்ததாக எழுந்த புகார், தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இது தொடர்பான வழக்கில், திருநாவுக்கரசு, ரிஷ்வந்த் என்கிற சபரிராஜன், வசந்தகுமார், சதீஷ் மற்றும் மணிவண்ணன் ஆகிய
 
ஐந்து பேர் கைது செய்யப்பட்டனர். பின்னர் இந்த வழக்கு சி.பி.

 ஐ. விசாரணைக்கு மாற்றப்பட்ட நிலையில், பொள்ளாச்சி அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தம், ஹேரேன் பால், பாபு என்கிற பைக் பாபு ஆகியோர் கைதாகினர்.

இதைத் தொடர்ந்து பொள்ளாச்சி பாலியல்  வழக்கு கோவை மகளிர் நீதிமன்றத்தில் நடந்துவரும் நிலையில், அருளானந்தம் ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

இந்த நிலையில், முன்னாள் அதிமுக நகர மாணவரணிச் செயலாளர் அருளானந்தத்தின் ஜாமீன் மனுவை, சென்னை உயர் நீதிமன்ற நீதிபதி எம்.தண்டபாணி தள்ளுபடி செய்தார்.

மேலும், இந்த வழக்கில் சி.பி.ஐ. விசாரணைக்கு உதவும் வகையில், சி.பி.சி.ஐ.டி. காவல் கண்காணிப்பாளர் முத்தரசியை நியமித்து நிதிபதி எம்.மணிகண்டன் உத்தரவிட்டார்.

அதேபோல், கோவை மகளிர் நீதிமன்றம், பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்தி, 6 மாதங்களுக்குள் வழக்கை முடிக்க வேண்டும் என்று உத்தரவிட்டார்.
 

 

Tags :

Share via