சட்டசபைக்கு மாற்றுத் தலைவர்கள்:  சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு

by Editor / 16-08-2021 04:16:36pm
சட்டசபைக்கு மாற்றுத் தலைவர்கள்:  சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு



தமிழக சட்டப்பேரவையில் தலைவர் இல்லாதபோது பேரவையை நடத்த மாற்றுத் தலைவர்கள் 6 பேர் செயல்படுவார்கள் என்று சபாநாயகர் அப்பாவு அறிவித்துள்ளார். 


தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடரின் மூன்றாவது நாள் கூட்டம்  கலைவாணர் அரங்கில் தொடங்கியது. அதையடுத்து சபாநாயகரும் சட்டப்பேரவைத் தலைவருமான அப்பாவு, தலைவர் இல்லாதபோது சட்டப்பேரவையை நடத்த மாற்றுத் தலைவர்களை அறிவித்தார். மாற்றுத் தலைவர்களாக அன்பழகன், ராமகிருஷ்ணன், எஸ்.ஆர்.ராஜா, உதயசூரியன், துரை சந்திரசேகர் மற்றும் டி.ஆர்.பி.ராஜா ஆகிய 6 பேர் செயல்படுவர் என்று அப்பாவு தெரிவித்துள்ளார்.


 சட்டப்பேரவையின் தற்போதைய சபாநாயகராக அப்பாவு, துணை சபாநாயகராக பிச்சாண்டி ஆகியோர் செயல்பட்டு வருகின்றனர். இருவரும் இல்லாத நேரத்தில், பேரவையை மாற்றுத் தலைவர்கள் வழிநடத்துவார்கள்.

மதுரை ஆதீனம், மதுசூதனன் மறைவுக்கு சட்டசபையில் இரங்கல்


 தமிழக சட்டசபையில்  மதுரை ஆதீனம் அருணகிரிநாதர், பிரபல அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காமேஸ்வரன், ஸ்டேன் சுவாமி, முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன் ஆகியோர் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது. தமிழக சட்டசபை கூடியதும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கல் குறிப்புகளை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் ஆ.தங்கராசு, க.ந.ராமச்சந்திரன், கே.பண்ணை சேதுராம், புலவர் பூ.ம.செங்குட்டுவன், கி.அய்யாறு வாண்டையார், ம.விஜயசாரதி, நன்னிலம் அ.கலையரசன், முன்னாள் அமைச்சர் இ.மதுசூதனன், திண்டிவனம் கே.ராமமூர்த்தி ஆகியோர் மறைவு குறித்து சபாநாயகர் இரங்கல் குறிப்புகளை படித்தார். இவர்களுக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.


மதுரை ஆதீனம்
பெரியாரியச் சிந்தனையாளர் வே.ஆனைமுத்து, பிரபல காது, மூக்கு, தொண்டை அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் காமேஸ்வரன், பழங்குடியின மக்களின் உரிமை போராளி ஸ்டேன் சுவாமி, தமிழறிஞர் இளங்குமரனார், மதுரை ஆதீனம் அருணகிரி நாதர் ஆகியோர் மறைவுக்கும் சட்டசபையில் இரங்கல் தீர்மானம் நிறைவேற்றப்பட்டன. அனைவரும் 2 நிமிடம் எழுந்து நின்று மவுன அஞ்சலி செலுத்தினார்கள்.
 

 

Tags :

Share via