உச்சநீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி புகார்

by Editor / 18-08-2021 01:21:58pm
உச்சநீதிமன்றத்தில் சிறப்பு டிஜிபி புகார்

போலீஸ் அதிகாரிகள் எனக்கு எதிராக காழ்ப்புணர்ச்சியால் செயல்படுவதால், வழக்கு விசாரணையை வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும் என பாலியல் புகாரில் சிக்கிய சிறப்பு டிஜிபி உச்சநீதிமன்றத்தில் கூறினார். ஆனால், அதனை ஏற்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.மாவட்ட எஸ்பி.,யாக இருந்த பெண் ஐபிஎஸ் அதிகாரி ஒருவர், கடந்த ஏப்ரல் மாதம் அப்போதைய முதல்வரின் பாதுகாப்பு பணியில் இருந்தார். சிறப்பு டிஜிபி, அவரது மாவட்டத்திற்கு வந்த போது, மரியாதை நிமித்தமாக சந்தித்தார். அப்போது, சிறப்பு டிஜிபி பாலியல் தொந்தரவு கொடுத்ததாக எஸ்பி, டிஜிபி மற்றும் உள்துறை செயலரிடம் புகார் அளித்தார். சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த கூடுதல் தலைமை செயலர் அந்தஸ்தில் உள்ள பெண் அலுவலர் தலைமையில் விசாரணை கமிட்டி அமைக்கப்பட்டது.

சிறப்பு டிஜிபி காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டார். அவர் மீதும், செங்கல்பட்டு முன்னாள் எஸ்.பி ஆகியோர் மீது 4 பிரிவுகளில் சிபிசிஐடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை விழுப்புரம் நீதிமன்றத்தில் நடந்து வருகிறது. அதில் 400 பக்க குற்றப்பத்திரிகையை சிபிசிஐடி போலீசார் தாக்கல் செய்தனர்.சிறப்பு டிஜிபி தரப்பில் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, சிறப்பு டிஜிபி தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் வாதாடுகையில், எனக்கு எதிராக போலீஸ் அதிகாரிகள் செயல்பட்டு வருகின்றனர். காழ்புணர்ச்சியால் போலீஸ் அதிகாரிகள் செயல்படுவதால் வழக்கில் எனக்கு நியாயம் கிடைக்காது. என் மீதான பாலியல் வழக்கை தமிழகத்தில் விசாரிக்க வேண்டாம். வேறு மாநிலத்திற்கு மாற்ற வேண்டும். வழக்கு விசாரணையை எதிர்கொள்ள தயாராக உள்ளேன் என தெரிவித்தார்.ஆனால், இதனை நிராகரித்த உச்சநீதிமன்றம், விசாரணை நீதிமன்றம், வழக்கை சட்டப்படி மட்டுமே விசாரிக்க வேண்டும் எனக்கூறி சிறப்பு டிஜிபியின் கோரிக்கையை நிராகரித்தது.

 

Tags :

Share via