கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல்- மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரால் பரபரப்பு

by Admin / 21-08-2021 01:50:20pm
கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல்- மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரால் பரபரப்பு

திண்டுக்கல் மாவட்ட காவல்நிலைய கன்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்த மனநலம் பாதிக்கப்பட்ட வாலிபரால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
 
திண்டுக்கல் மாவட்டம் அம்பாத்துரை போலீஸ் நிலையத்தைச் சேர்ந்தவர் தலைமை காவலர் மகேஸ்வரி. இவர் தற்போது திண்டுக்கல் மாவட்ட போலீஸ் கன்ட்ரோல் ரூமில் வேலை பார்த்து வருகிறார்.

இதற்கிடையில் நேற்று பணியில் இருந்த காவலர் மகேஸ்வரியிடம் மர்ம நபர் ஒருவர் போன் செய்து வடமதுரை அருகே ரயில் தண்டவாளம், திண்டுக்கல் அரசு மருத்துவமனை, திண்டுக்கல் ரயில் நிலையம் உள்ளிட்ட பகுதிகளில் வெடிகுண்டு வைத்துள்ளதாகவும், எப்போது வேண்டுமானாலும் வெடிக்கலாம் என்றும் மிரட்டல் விடுத்துவிட்டு இணைப்பை துண்டித்து விட்டார்.

இதுகுறித்து உடனடியாக வடமதுரை போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

 பின்னர் வடமதுரை போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பிரபாகரன் மாவட்ட கண்ட்ரோல் ரூமுக்கு  வந்த செல்போன் அழைப்பின் சிக்னலை வைத்து விசாரணை நடத்தியதில் போன் செய்த நபர் திண்டுக்கல் நாகல்நகர் மேம்பாலத்தில் இருப்பது தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் அங்கு சந்தேகப்படும்படியாக சுற்றித் திரிந்த ஒரு நபரை பிடித்து விசாரணை நடத்தினர் அதில் அவர் திண்டுக்கல் அருகே உள்ள சிறுமலை பழையூரைச் சேர்ந்த சந்திரசேகர்(வயது 32) என்பதும், அவர் மனநலம் பாதிக்கப்பட்டு திண்டுக்கல்லில் உள்ள ஒரு மனநலம் பாதிக்கப்பட்டோர் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வந்ததும் தெரிய வந்தது.

இரண்டு நாட்களுக்கு முன்பு காப்பகத்தில் இருந்து வெளியே சென்றவர், திண்டுக்கல் பகுதியில் சுற்றித் திரிந்த தாகவும் அப்போது மாவட்ட கண்ட்ரோல் ரூமுக்கு போன் செய்து வெடிகுண்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது அதனை தொடர்ந்து போலீசார் அவர் மீது வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர் அதன் பின்னர் அவர் மனநலம் பாதிக்கப்பட்டவர் என்பதை அறிந்த காவல்துறையினர் சந்திரசேகரை மீண்டும் காப்பகத்தில் ஒப்படைத்தனர்

 

Tags :

Share via