செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு - சிறப்பு அதிகாரிகள் நியமனம்

by Editor / 23-08-2021 04:53:47pm
செப்.1 முதல் பள்ளிகள் திறப்பு கண்காணிப்பு - சிறப்பு அதிகாரிகள் நியமனம்

தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வரும் நிலையில் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு பள்ளிகள் வருகிற செப்டம்பர் 1 ஆம் தேதி திறக்கப்பட உள்ள நிலையில், கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைபிடிக்கப்படுவதை உறுதி செய்ய மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.

தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக கடந்த ஒன்றரை ஆண்டுகளாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஜனவரி மாதம் 9 முதல் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டது. ஆனால் அதன் பின்னர் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் தலைதூக்க தொடங்கியது. மேலும் பல மாவட்டங்களில் பள்ளி மாணவர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது.

இதன் காரணமாக பள்ளிகள் முழுவதுமாக மூடப்பட்டன. இந்நிலையில் தற்போது வரை பள்ளிகள் திறக்கப்படாத காரணத்தால் மாணவர்கள் மன அழுத்தத்தால் பாதிக்கப்படுகின்றனர். அதனால் பள்ளிகளை திறக்க வேண்டும் என பல தரப்பில் இருந்து கோரிக்கை வைக்கப்பட்டது. தற்போது கொரோனா பரவல் கணிசமாக குறைந்த காரணத்தால் 9 முதல் 12 ஆம் வகுப்பு வரை மாணவர்களுக்கு செப்டம்பர் 1 ஆம் தேதி பள்ளிகளை திறக்க அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதற்கான வழிகாட்டு நெறிமுறைகளை அரசு ஏற்கனவே வெளியிட்டுள்ளது. அனைத்து ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் பள்ளிகளை திறப்பதற்கான ஏற்பாடுகளை முன்கூட்டியே கண்காணிக்கவும், பள்ளிகள் திறக்கப்பட்ட பிறகு கொரோனா தடுப்பு விதிமுறைகள் கடைப்பிடிக்கப்படுவதை உறுதி செய்யவும், மாவட்ட வாரியாக சிறப்பு அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். பள்ளிக்கல்வித்துறையை சேர்ந்த இயக்குனர்கள், இணை இயக்குனர்கள் இந்த பணிகளில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். 

 

Tags :

Share via