விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

by Admin / 25-08-2021 02:00:15pm
விவசாயிகளுக்கு பயிர் காப்பீடு முழுமையாக கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்- ஜி.கே.வாசன்

விவசாயிகளிடம் வாங்கும் பிரீமியம் போக மீதி தொகையை மத்திய, மாநில அரசுகள் முறையாக பங்கீடு செய்து கொள்ள வேண்டும் என ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

 தமிழக அரசு விவசாயிகளின் பயிர்க்காப்பீடு சம்பந்தமாக உரிய அறிவிப்பை காலத்தே வெளியிட்டு பயிர்க்காப்பீட்டின் பயனை விவசாயிகள் முழுமையாகப் பெற உதவிக்கரமாக செயல்பட வேண்டும்.

இந்த நிலையில் குறுவை நெல், தட்டைப்பயறு ஆகியவற்றுக்கு காப்பீடு வழங்கப்படாது என்று தமிழக அரசு அறிவித்திருப்பது விவசாயிகளிடம் குழப்பத்தை ஏற்படுத்தியிருக்கிறது. மேலும் இயற்கை இடர்பாடுகளால் பாதிப்பு ஏற்பட்டால், மாநில பேரிடர் நிவாரண நிதியிலிருந்து விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்கப்படும் எனவும் தமிழக அரசு அறிவித்துள்ளது.

நெற்பயிர்கள் முழுமையாக பாதிக்கப்பட்டால் காப்பீட்டுத் திட்டத்தில் ஏக்கருக்கு 34,500 ரூபாய் இழப்பீடு கிடைக்கும். அதே சமயம் மாநில பேரிடர் நிதியிலிருந்து இழப்பீடு வழங்கினால் ஏக்கருக்கு அதிகபட்சம் 8,000 ரூபாய் தான் இழப்பீடு கிடைக்கும்.

குறுவை சாகுபடிக்கு விவசாயிகள் ஜூன் மாதமே காப்பீடு செய்திருக்க வேண்டும். இப்போது காப்பீடு செய்வதை காப்பீட்டு நிறுவனங்கள் ஏற்றுக்கொள்ளாது.

விவசாயிகளிடம் வாங்கும் பிரீமியம் போக மீதி தொகையை மத்திய, மாநில அரசுகள் முறையாக பங்கீடு செய்து கொள்ள வேண்டும். குறிப்பாக விவசாயிகளின் பயிர்க்காப்பீடு தொடர்பாக தமிழக அரசு உரிய காலத்தில் விவசாயிகளின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப அறிவிப்பை வெளியிட்டு, பயிர்க்காப்பீட்டின் பயன் விவசாயிகளுக்கு முழுமையாக கிடைக்க வழி வகை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

 

Tags :

Share via